உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலைக்கு வலுவான ஆபத்து இருப்பதாகக் கூறுகின்றன.
அமெரிக்காவின் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு மாநாடு இடம்பெற்றது.
இதன்போது இந்த அபாயத்தால் உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை அங்கு அவர்கள் காட்டியுள்ளன.
வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்படும் மந்தநிலை மற்றும் விரைவான பணவீக்கம் வளரும் நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளன.
உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்ஃபாஸ், அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரம் கணிசமான அளவு சுருங்குவதற்கான உண்மையான ஆபத்து இருப்பதாகக் கூறினார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கடன் சுமையும் இவ்வாறாக அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜார்ஜீவா, இந்த பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தை உலகின் வலுவான பொருளாதாரங்களும் உணரும் என்று கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சுருங்குவதற்கான அதிக ஆபத்து உள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்பு உள்ளது என்பது அவர்களின் கணிப்பு.
அதன்படி, 2026ஆம் ஆண்டுக்குள் உலக உற்பத்திப் பொருளாதாரம் 04 டிரில்லியன் டொலர்களை இழக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கொடுப்பனவு சமநிலையில் 09 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை ஏற்படும் என மேலும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை சமாளிக்கும் திட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் உலகம் நெருக்கடியின் விளிம்பில் நிற்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, உலகில் வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.