இலங்கையில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைத்தால், ஒரு பாண் இறாத்தலின் விலையை 20 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவில் இருந்து 265 ரூபாவாக குறைக்கப்பட்டாலும் பாண் மற்றும் பன்களின் விலையை குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ மாவை 250 ரூபாவிற்கு இலகுவாக வழங்க முடியும் என்ற நிலையில் இரண்டு நிறுவனங்களும் மாவின் விலையை அதிகரிப்பது மிகவும் அநியாயமானது எனவும் அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர்களை நசுக்குவதாகவும் ஜயவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைப்பதற்கு அரசாங்கத்தின் தலையீடு நிச்சயம் தேவை எனவும், இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 320 மற்றும் 285 ரூபாவிற்கு விற்பனை செய்து பெரும் இலாபம் ஈட்டி வருவதாகவும் ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.