பிரிட்டன் தனது இஸ்ரேல் தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு மாற்ற முயற்சி: தார்மீக ரீதியில் பாதுகாப்பற்றது (லத்தீப் பாரூக்)

Date:

சுமார் 40 வருடங்களுக்கு முன் 1980 களின் ஆரம்ப கட்டத்தில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக இருந்த அலக்ஸாண்டர் ஹெய்க் அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதியாக வரும் கனவோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தைக் கொண்டிருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் தான் 250க்கும் மேற்பட்ட பலஸ்தீன அப்பாவி மக்களை ஆண், பெண் பேதங்களின்றியும் வயது பேதமின்றியும் கொன்று குவித்த இஸ்ரேலின் மெனாச்சம் பெகின் அந்த நாட்டின் பிரதமராக இருந்தார்.

அப்போது மெனாச்சம் பெகின் அலெக்ஸாண்டர் ஹெய்க்கிடம் உதிர்த்த வார்த்தைகள்“ வெள்ளை மாளிகைக்கான பாதை டெல் அவிவ் ஊடாகத்தான்” என்பது.

அமெரிக்காவின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்றால் அவருக்கு யூத சக்திகளின் ஆதரவு இருக்க வேண்டும் என்பதை இதன் மூலம் அவர் தெளிவாகக் கூறினார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்த எல்லோருமே இஸ்ரேலுக்கு அதன் சட்ட
ரீதியற்ற பின்னணி, சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதன் செயற்பாடுகள், முடிவற்ற குற்றச் செயல்கள், பலஸ்தீன மண்ணின் மைந்தர்களான அப்பாவி பலஸ்தீன மக்களிடம் இருந்து அவர்களது சொந்த பூமியை சூறையாடி தொடர்ந்து அவர்கள் மீது இழைத்து வரும் கொடூரங்கள் என எதையும் கண்டு கொள்ளாமல், இஸ்ரேலுக்கு நிபந்தனைகள் அற்ற ஆதரவை வழங்கி இதனை நிரூபித்தும் உள்ளனர்.

முழு மத்திய கிழக்கையும் சீர்குலைக்கும் வகையில் அங்கு இஸ்ரேல் என்ற நச்சு விதையை விதைத்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான்.

அங்கும் கூட பிரதமர் பதவி வகித்த  எல்லோருமே இஸ்ரேலை வெளிப்படையாக ஆதரித்து வந்துள்ளனர்.

சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன பற்றி அவர்கள் வாய்கிழிய பேசினாலும் கூட இஸ்ரேல் விடயத்தில் எதையும் கண்டு கொள்ளாதவர்களாகவே இருந்துள்ளனர்.

1948க்கு முன் உலகில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கவே இல்லை என்பதை இங்கு நினைவூட்டிக் கொள்வதே மேலானது. பலஸ்தீனம் தான் அப்போது இருந்த தேசம்.

அங்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சிறிய எண்ணிக்கையிலான யூதர்கள் ஆகியோர் சமாதானமாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்தனர்.

முதலாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் தான் பலஸ்தீன பிரதேசம் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

துருக்கி சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்தி அதன் கீழ் இருந்த பலஸ்தீனத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம் வசப்படுத்தினர்.

அன்று முதல் சியோனிஸ யூதர்கள் உலகம் முழுவதும் சிதறிக் கிடந்த தமது சகாக்களை பலஸ்தீன பகுதிகளில் கொண்டு வந்து குடியேற்ற யூதர்களுக்கு தேவையான முழு ஆதரவையும் பிரிட்டன் வழங்கியது.

அவ்வாறு கொண்டு வரப்பட்ட யூதர்கள் பலஸ்தீன தாயகத்தின் சொந்தக்காரர்களான அப்பாவி மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு அவர்களைக் கொன்று குவித்தும், அச்சுறுத்தியும் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றத் தொடங்கினர்.

இதன் மூலம் அகதி முகாம்களுக்குள் முடக்கப்பட்ட பலஸ்தீன மக்களில் பலர் இன்னமும் அந்த முகாம்களிலேயே காலத்தைக் கடத்துகின்றனர்.

1948ல் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இணைந்து பலஸ்தீனத்தை துண்டாடி இஸ்ரேல் என்ற நாட்டை யூதுர்களுக்காக உருவாக்கும் பிரேரணையை ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்தன.

பல நாடுகளுக்கு இலஞ்சம் வழங்கியும் அச்சுறுத்தியும் இஸ்ரேலை உருவாக்கும் தீர்மானத்தை அமெரிக்க ஐரோப்பிய சக்திகள் நிறைவேற்றிக் கொண்டன.

பின்னர் ஜெரூஸலம் நகரம் மேற்கு ஜெரூஸலம் என்றும் கிழக்கு ஜெரூஸலம் என்றும் இரண்டாகத் துண்டாடப்பட்டது. மேற்கு ஜெரூஸலப் பிரதேசங்கள் 1948 பிரிவினையின் போது இஸ்ரேலுடன் பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்டன.

1967ல் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது கிழக்கு ஜெரூஸலத்தையும் அது கைப்பற்றிக் கொண்டது. அன்று முதல் ஜெரூஸலம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக கையாளப்பட்டு வருகின்றது.

அன்று முதல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவும் கூட இஸ்ரேலை
பத்திரமாகப் பாதுகாத்து வருவதோடு பலஸ்தீனர்களுக்கும் அரபிகளுக்கும் எதிரான
யுத்தத்தின் போது அது கைப்பற்றியப் பிர தேசங்களை தன்னோடு இணைத்துக் கொள்ளும் விடயத்திலும் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.

தற்போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் அடிச் சுவட்டைப் பின்பற்றி புதிய பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் தற்போது டெல்அவிவ் நகரில் இருக்கும் இஸ்ரேலுக்கான பிரிட்டிஷ் தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு இடம்மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

ஜெரூஸலத்தை இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பூமியாகக் கையாண்டு வருகின்றது என்பதை நன்கு தெரிந்திருந்தும் அந்த நடவடிக்கையில் பிரிட்டிஷ் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தெடரின் போது பிரதான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்ட வகையில் இதுவரை பிரிட்டனில் பதவி வகித்த பிரதமர்களில் மிகத் தீவிரமான இஸ்ரேல் ஆதரவாளரான இன்றைய பிரதமர் லிஸ் டிரஸ் தனது நீண்டகால நண்பரான இஸ்ரேல் பிரதமர் யாயிர் லெபிட்டை சந்தித்து டெல்அவிவ் நகரில் உள்ள தனது நாட்டு தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு இடம்மாற்ற தான் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்றைய பிரிட்டிஷ் பிரதமரின் இந்த முடிவு பிரிட்டனில் நீண்டகாலமாக மார்க்கிரட் தட்சர் முதல் பொரிஸ் ஜோன்ஸன் வரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கைகளில் வியக்கத்தக்க மயக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

பிரிட்டிஷ் தூதரகத்தை இடம்மாற்றும் இந்த முடிவு பலஸ்தீனத்துக்கான உத்தேச
இருநாட்டுத் தீர்வையும் அத்தோடு பிரிட்டனுடனான தங்களது உறவுகளையும்
பாதிப்பதாகவே முடியும் என்று பலஸ்தீன தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“பிரிட்டனின் இந்த செயற்பாடு தார்மிக ரீதியாகப் பாதுகாப்பற்றது, சட்ட ரீதியாக
கேள்விக்குரியது, அரசியல் ரீதியாக தீங்கு விளைவிக்கக் கூடியது” என்று அவி ஷாலெய்ம் என்ற பத்தி எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை இடம் மாற்றுவது தொடர்பான ஒரு மீளாய்வுத் தேவைக் குறைவான ஒரு வெளிநாட்டு கொள்கை விடயம் பற்றி சிந்திப்பது கூட கஷ்டமானது என்று அவர் மேலும் விவரித்துள்ளார்.

பிரிட்டிஷ் தூதரகத்தை இடம்மாற்றுவது பற்றிய பிரதமர் லிஷ் டிரஸ்ஸின் முடிவு ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் மூவரால் மிக வன்மையாகக் கணடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.நா நிபுணர் மைக்கல் லங்க் மற்றும் ஆர்தி இம்ஸீஸ் ஆகியோர் “இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையில் விரிவான ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுகின்ற வரைக்கும் பிரிட்டிஷ் தூதரகம் டெல்அவிவ் நகரில் தான் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலம் வரை ஐ.நா நிபுணர்களாக இருந்தவர்களும், இன்னமும் அந்தப் பதவியில் இருப்பவர்களும், விஷேட அறிக்கையிடும் அதிகாரிகளும் 1967ல் பலஸ்தீனப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது முதல் அங்கு இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்.

அவர்களோடு சேர்த்து மற்றொரு ஐ.நா நிபுணரும் பிரிட்டிஷ் பிரதமரின் முடிவை வன்மையாகக் கணடித்துள்ளதோடு அந்த முடிவு மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட தவறுகளோ செய்வதால் அது சரியென்று
ஆகிவிடாது. ஜெரூஸலத்தில் பண்புகளில், அந்தஸ்த்தில், மக்கள் பரம்பளில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் சட்ட ரீதியாக எந்தத் தாக்கமும் அற்றவை.

அவை செல்லுபடியற்றவை, இரத்துச் செய்யப்பட வேணடியவை என்று தற்போதைய ஐ.நா விஷேட அறிக்கையாளர் பிரன்ஸெஸா அல்பெனஸே தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வெஸ்ட்மினிஸ்டரின் அதிமேற்றிராணியார் கர்தினால் வின்ஸன்ட் நிக்கலஸ் இஸ்ரேலில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெரூஸலத்துக்கு மாற்றும் தனது முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேள்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான இவர் பிரதமரின் முடிவு குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிரந்தர சமாhனத்துக்கான சகல சாத்தியமான
வழிகளையும் பிரமதரின் தூதரக இடமாற்ற முடிவு மிகக் கடுமையாகப் பாதிக்கும்
அத்தோடு அது பிரிட்டனின் சர்வதேச கீர்த்தியையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்று கர்தினால் நிக்கலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெரூஸலம் தொடர்பாக இதுவரை இருந்து வருகின்ற சர்வதேச நிலைப்பாடுகள் அது சம்பந்தமான ஐக்கிய நாடுகள் தீர்மானங்களுக்கு இசைவாக பேணப்பட வேண்டும் என்பதே பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் மற்றும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனப் பகுதிகளில் உள்ள திருச்சபைத் தலைவர்கள் ஆகியோரின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்றது என்பதையும் அவர் நினைவு படுத்தியுள்ளார்.

‘ஜெரூஸலம் நகரம் ஒரு பொதுவான பரம்பரை சொத்தாகப் பேணப்பட வேண்டும். எந்த ஒரு தரப்பினதும் ஏகபோக உரிமையாக அது ஒரு போதும் ஆகிவிடக் கூடாது’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தூதரக மாற்றத்துக்கான தேவை இப்போது ஏற்பட்டுள்ளமைக்கான எந்தக் காரணத்தையும் என்னால் கண்டு கொள்ள முடியவில்லை.

பிரதமர் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என நான் மிகவும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த எண்ணத்தை விட்டு விட்டு அவர் பலஸ்தீனப் பிரச்சினைக்கான இருநாட்டுத் தீர்வில் கவனம் செலுத்த வேண்டும். அந்தத் தீர்வுக்குள் ஜெரூஸலத்துக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட விஷேட அந்தஸ்த்து இருக்க வேண்டும் என்று தனது முடிவையும் கர்தினால் வெளியிட்டுள்ளார்.

ஒக்ஸ்பேர்ட் பல்கனலைக்கழகத்தின் சர்வதேச விவகாரத்துறை பேராசிரியரான அவி ஷலெய்ம் தெரிவித்துள்ள கருத்தில் பிரதமரின் இந்த முடிவு அழிவை ஏற்படுத்தக் கூடியது.

பெல்பேர் பிரகடனத்தின் பின் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட மிகவும் மூர்க்கத்தனமான ஒரு தாக்குதலாகவும் இதை கருத முடியும்.

1967 முதல் ஆக்கிரமிப்பு வெறியில் மூழ்கிப்போன ஒரு நாடாகவே இஸ்ரேல் காணப்படுகின்றது என்பதே சகிக்க முடியாத சோகமானதோர் உண்மையாகும். எந்தவொரு உண்மையான நண்பனும் தனது நண்பன் இவ்வாறு போதையில் மூழ்கியிருப்பதை ஊக்குவிக்க மாட்டான் மாறாக அதிலிருந்து அவனை விடுவிக்கவே முயல்வான் என்று தெரிவித்துள்ளார்.

(முற்றும்)

Popular

More like this
Related

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...

ஞானசார தேரருக்கு எதிராக மீண்டும் பிடியாணை உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது...

முதல் முயற்சியிலேயே தேசிய உற்பத்தித்திறன் விருதை வென்று சாதனை படைத்தது Eastern Cancer Care Hospice.

தேசிய உற்பத்தித்திறன் விருது (National Productivity Award) போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற...