இவ்வருட மீலாத் தினம் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு தலைப்புக்களில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகின்ற நிலையில், புத்தளம் நிந்தனி பகுதியில் வாழும் சிறார்களின் நலன் கருதி அப்பகுதியிலுள்ள முஹாஜிரின் ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாட்டில் நேற்று (09) மாலையில் மீலாத் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.
15 வருடங்களுக்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்பதால் சிறார்கள் இந்நிகழ்ச்சிகளில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிராஅத்தை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடர்ந்து சிறுவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
மாணவர்களின் மார்க்க ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிராஅத், கஸீதா, குழுப்பாடல்கள், உரையாடல்கள், பேச்சுக்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
நிகழ்ச்சியின் இடையே பொதுமக்கள் மத்தியிலும், கேள்விகள் கேட்கப்பட்டு, பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், ‘இறைத் தூதரின் மீதான அன்பு எவ்வாறு அமைய வேண்டும்’ எனும் தலைப்பில் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். அப்துல் முஜிப், உரை நிகழ்த்தினார்.
அதேநேரம், சமூக சேவையாளர் முஹம்மத் ருமைஸ் அவர்கள் இவ்விழாவை சிறப்பாக வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.