யார் இந்த ரிஷி சுனக்?: பிரிட்டிஷ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்

Date:

ரிஷி சுனக், இன்றைய நிலையில் சமூக ஊடகங்களிலும், இணையங்களிலும், பிரதான ஊடகங்களிலும் அதிகம் உச்சரிக்கப்படும் நாமம் இதுதான்.

பிரிட்டனின் அடுத்த பிரதம மந்திரியாகப் பதவியேற்கவுள்ளார். அவர் ஒரு இந்திய வம்சாவழியை சார்ந்தவர் என்பதால் தான் இவ்வளவு பிரதானமாகப் பேசப்படுகின்றார்.

இந்திய ஊடகங்களின் இயல்பு அது. அந்த பாதிப்பை தான் இந்தியா சார்ந்த சமூக ஊடகங்களிலும் காண முடிகின்றது.

இவ்வளவுக்கும் ரிஷி சுனாக் இந்திய வம்சாவழி குடும்பத்தில் பிறந்தார். உலகப் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் இந்திய கோடீஸ்வர வர்த்தகருமான நாகவராவ ராமாராவ் நாராயணமூர்த்தியின் மகளை மணந்துள்ளார் என்பதை தவிர அவர் பிறந்தது பிரிட்டனின் சவுத்ஹெம்ப்டன் மாநில அரச மருத்துவமனையில். பிறப்பு வழியாக அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை.

இவரின் பெற்றோர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநில வம்சாவழியினர். ஆபிரிக்க இந்துக்கள் எனக் குறிப்பிடப்படும் யஷ்விர் சுனாக், உஷா சுனாக் ஆகியோருக்குப் பிறந்தவர்தான் ரிஷி சுனாக்.

படித்தது பிரிட்டனிலும் அமெரிக்காவிலும். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது தான் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை சந்தித்தார்.

இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து பெற்றோரின் சம்மதத்தோடு 2009ல் திருமணம் நடந்தது. முழுக்க முழுக்க இந்திய பாரம்பரிய மரபுகளின் படி பெங்களுரில் தான் இந்தத் திருமணம் நடந்ததாக ஒரு தகவலில் காண முடிந்தது.

தற்போது இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த தகவல் மூலம்  அறிய முடிந்தது.

இந்த திருமண உறவைத் தவிர அவர் தன்னை ஒரு இந்திய வம்சாவழி இந்துவாக ஒருபோதும் பகிரங்கமாக இனம் காட்டிக் கொண்டதில்லை. ஆனால் அவர் ஒரு இந்து மத பக்தர். இந்து சமயக் கிரியைகளிலும் ஈடுபடுபவர்.

பெரும்பாலும் அவர் பகவத் கீதையில் கைவைத்தே தனது சத்தியப்பிரமாணத்தை செய்து கொள்ளக் கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் பிரிட்டிஷ் பிரமதராக வரும் முதலாவது இந்திய வம்சாவழி குடிமகன்.

பிரிட்டிஷ் பிரதமராக வரும் முதலாவது வெள்ளையர் அல்லாதவர்.

கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரிட்டனில் பிரதமராகப் பதவியேற்கும் முதலாவது இந்து மதத்தவர்.

முதல் தடவையாக பகவத் கீதையில் சத்தியப்பிரமாணம் செய்த பிரிட்டிஷ் பிரதமர்

இப்படி பல சிறப்புக்களை அவர் பெறுகிறார்.

இந்த நேரத்தில் அவரை மையமாக வைத்து இந்திய நெட்டிசன்கள் சர்வதேச மட்டத்தில் தமது கற்பனைக் குதிரைகளை பிரம்மாண்டமாக பறக்க விட்டுள்ளனர்.

குறிப்பாக அவர்கள் இங்கே ஞாபகப்படுத்தி உள்ள விடயம். பிரிட்டனின் யுத்தகால பிரதம மந்திரி சேர். வின்ஸ்டன் சேர்ச்சில் பற்றியது.

சேர்ச்சில் வெளிப்படையாக இந்தியர்களை வெறுத்தவர் என்பது பரவலாகப் பேசப்படும் ஒரு விடயம். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால அவரின் முகபாவங்கள் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கூட சிலர் வெளியிட்டுள்ளனர்.

இந்திய தலைவர்களை மோசடிக்காரர்கள், தரக்குறைவானவர்கள் என்று 75 வருடங்களுக்கு முன் சேர்ச்சில் குறிப்பிட்டதையும் சிலர் நினைவூட்டி உள்ளனர். இது தவறான கருத்தா அல்லது இந்த நிலையில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பற்றி நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.

ஆனால் சேர்ச்சில் அவ்வாறு கூறி 75 வருடங்களின் பின் இந்திய வம்சாவழி ஒருவரே பிரிட்டனின் பிரமதராக பதவி ஏற்பதை சிலர் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர். கால ஓட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் கோஹினூர் வைரம் பற்றியும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சிலர் நினைவு படுத்தி உள்ளனர். 105.6 கரட் எடை கொண்ட இந்த வைரம் விலைமதிப்பற்றது.

14ம் நூற்றாண்டு வரை அது இந்தியாவில் தான் இருந்தது. முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானது. ஆனால் இந்திய வளங்களை சூறையாடிய அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1849ல் அதை இந்தியாவில் இருந்து திருடிச் சென்றதாக வரலாறு கூறுகின்றது.

அன்று அரசியாக இருந்த விக்டோரியா மகாராணியின் மணி மகுடத்தில் அது சூடப்பட்டது. இன்று வரை பிரிட்டிஷ் மணிமகுடத்தை அலங்கரிக்கும் பிரதான வைரமாக கோஹினூர் வைரம் திகழ்கின்றது.

இன்னும் சில மாதங்களில் சார்ள்ஸ் சூடிக் கொள்ள உள்ளதும் இதே மணிமகுடம் தான். இந்திய வம்சாவழி ஒருவர் பிரதமராக வந்திருக்கும் நிலையில் மன்னர் சார்ள்ஸாவது அந்த வைரத்தை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவாரா என்ற கேள்வியையும் கிண்டலாக சில சமூக ஊடகங்கள் எழுப்பி உள்ளன.

இதை விட வேடிக்கை என்னவென்றால் இந்த இணைய செயற்பாட்டாளர்கள் தற்போதைய இந்திய பிரதமர் மோடி மற்றும் அவரின் பரிவாரங்களையும் வழமைபோல் தமது கிண்டலில் இருந்து விட்டு வைக்கவில்லை.

மோடி உடனடியாக விமானத்தில் ஏறி கோஹினூர் வைரத்தை கேட்க புறப்பட்டு விட்டது போலவும். ஒரு பெண்ணின் உடையில் அவர் அந்த வைரத்தோடு திரும்பி வருவது போலவும் மீம்ஸ்கள் வெளிவந்துள்ளன.

எவ்வாறேனும் ரிஷி சுனாக் இந்திய அரசியலோடு தொடர்பு பட்டமைக்கான எந்தத் தகவலும் இதுவரை இல்லை. அவர் அரசியலைக் கற்றுக் கொண்டதும் இந்தியாவில் அல்ல.

தமது இனம் சாராத, தமது மதம் சாராத ஒருவரை தமது தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் அதுவும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் ஏற்றுக் கொண்டுள்ள, பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தான் இங்கு உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள.

கன்சர்வேடிவ் கட்சியின் இந்த முடிவுக்கு எதிராக பிரிட்டிஷ் பொது மக்கள் கூட இன்னும் வாய் திறக்கவில்லை. எதிர் கட்சி கூட மௌனமாக இந்த முடிவை ஏற்றுள்ளது என்பதே எனது கருத்தாகும். அந்த வகையில் ஒட்டு மொத்த பிரிட்டிஷ் மக்களும் இந்தத் தருணத்தில் பாராட்டுக்கு உரியவர்கள்.

இந்தியாவிலோ இலங்கையிலோ இது வெறும் கனவு தான். அதற்கு நல்லதோர் உதாரணம் சோனியா காந்தி. அவருக்கு என்னவெல்லாம் இந்திய தலைவர்களும் மக்களும் கூறினார்கள் என்பது இங்கே நினைவூட்டத்தக்கது.

இதைவிட வேறு எந்த உதாரணத்தையும் இங்கு நான் நினைவு படுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லை.

பிரிட்டிஷ் அரசியல்வாதிகளினதும் மக்களினதும் பக்குவம், அரசியல் நாகரிகம், பண்பு, தாராள சிந்தனை, தகுதியானவருக்கு இடமளிக்கும் அவர்களின் சுபாவம் இவை மெச்சத்தக்கவை.

இலங்கை இந்திய தலைவர்கள் (அவ்வாறு சொல்லிக் கொள்பவர்கள்) அல்லது மக்களிடம் இருந்தோ இதை எதிர்ப்பார்க்கவே முடியாது.

அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.
ஒரு தேசத்தைப் பற்றி சிந்திக்கும் ஊடகவியலாளர்கள் அல்லது அவ்வாறு தம்மை அழைத்துக் கொள்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்ட வேண்டியவை இவைகளே தவிர வீண் பெருமை பேசுவதல்ல.

மூலம்: நவ்ஷாட் மொஹிதீன் முகப்புத்தகத்திலிருந்து…..

Popular

More like this
Related

YMMA இன் மனித நேயப் பணி வெல்லம்பிட்டியில்..!

கொழும்பு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், வை.எம்.எம்.ஏ. பேரவையின் உதவிச்செயலாளர் அப்துல்...

ராஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துங்கள்: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள...

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என சபாநாயகர்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும்...