சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் ஒருவரின் 13 வயது மகளுக்கும் மற்றொரு தீட்சிதருக்கு நடந்த திருமணம் சர்ச்சையானதை அடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தை பொது தீட்சிதர்கள் நிர்விகித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தீட்சிதர்கள் மீது பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகிறது.
குறிப்பாக கோயில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கும் தீட்சிதர்களுக்கும் திருமணம் செய்யப்பட்டுவருவதாக புகார் எழுந்தது.
இந்த புகாரையடுத்து கடந்த சில வாரங்களாக இரு வழக்குகளில் எட்டுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மூன்றாவது வழக்காக கோவில் செயலர் மகளுக்கு குழந்தை திருமணம் செய்துவைத்தாக நடராஜர் கோவிலில் செயலாளராக இருக்கும் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.
2021ஆம் ஆண்டு அவருடைய 13 வயது மகளுக்கு திருமணம் செய்ததாக சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
அதில் 13 வயது சிறுமியின் தந்தை ஹேமசபேச தீட்சிதர், சிறுமியை திருமணம் செய்து கொண்ட ஞானசேகரன் என்னும் ராஜரத்தினம் தீட்சித்தர், அவரது தந்தை வெங்கடேசன் என்கிற விஜயபாலன் தீட்சிதர் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனால் சக தீட்சிதர்கள் கிழக்கு கோபுர வாயில் முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொலிஸாருக்கும் தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.
அதன்பின் தீட்சித்தர்களை பொலிஸார் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட மூவரும் சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுனர்.
திருமண மண்டபத்தில் 2021 ஜனவரி 25 அதிகாலையில் நடைபெற்ற திருமண பதிவை வைத்து, இந்த திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.
ஆனால் இது கூட பொய் என்று அவர்கள் சொல்ல வாய்ப்பு உள்ளதால் புகைப்பட ஆதாரங்களையும் கைப்பற்றி உள்ளனர். இந்த சிறுமிக்கு திருமணம் செய்ததோடு மட்டுமின்றி பொலிஸார் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த சிறுமியை ஒளித்து வைத்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைக்கு வந்த போது விசாரணை செய்ய விடாமல், சிறுமி ஊரில் இல்லை என்று கூறி, வீட்டிற்கு உள்ளேயே அறை ஒன்றில் ஒளித்து வைத்து உள்ளனர்.