இஸ்லாம் விரோத சக்திகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்த உதவுகின்றன!: லத்தீப் பாரூக்

Date:

சவூதி அரேபிய ஆட்சியில் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவில் தனிமனித
நாடகமாக அரங்கேற்றப்பட்டு வரும் முற்றிலும் மேலைத்தேச மயப்படுத்தப்பட்ட
திட்டங்கள், அவற்றுக்கு எதிரானவர்களுக்கு ஷரீஆ சட்டம் என்ற போர்வையில்
வழங்கப்பட்டு வரும் தண்டனைகள் இப்போது சாதாரண மக்களின் கடும்
கண்டனத்துக்கு ஆளாகி வருகின்றன. காரணம் இவை எதுவுமே இஸ்லாத்தை
பிரதிபலிக்கவில்லை.

500 பில்லியன் டொலர்கள் செலவில் சவூதி அரசு நிர்மாணிக்க உத்தேசித்துள்ள
நியொம் பெருநகர திட்டம் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

இந்த நகரத்தில் கரையோர விடுதிகளில் மது தாராளமாகக் கிடைக்கும். சிந்தலா எனப்படும் இந்த செங்கடல் தீவுத் திட்டத்தில் மது மற்றும் அது தாராளமாகப் பாவிக்கப்படும் வைபவங்கள் என்பனவற்றுக்கு எந்தக் குறையும் இருக்காது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கை ஒன்றின் படி நியொம் நகரம் நியுயோர்க் நகரை
விட 33 மடங்கு பெரியதாக இருக்கும் என அதன் ஏற்பாட்டாளர்கள் உரிமை கோரி
உள்ளனர். 170 கிலோமீற்றர் நேர் நீளம் கொண்ட நகரமான இங்கு நீரில் மிதக்கும்
வகையிலான எட்டு உப நகரங்களும் அமையவுள்ளன.

மடிந்த செங்குத்து கிராமம் அதில் விண்ணைத் தொடும் உயரத்தில் விடுதிகள் செங்குத்து சுவர் காட்சியமைப்பு கொண்ட கண்ணைக்கவரும் சில்லறை மதுபான விற்பனை நிலையம் போன்ற கட்டிடக் கலையையே சவாலுக்கு உட்படுத்தவுள்ள பல அம்சங்கள் இங்கு அமையவுள்ளன.

இங்கே பெண்கள் அரைகுறை பிகினி ஆடையுடன் உல்லாசமாக சுற்றித்
திரியலாம். இந்தத் திட்டத்தின் மூலம் உலகில் ஆடம்பர படகுச் சவாரிகளை
மேற்கொள்ளக் கூடிய அதி சிறந்த இடமாக செங்கடல் பிரதேசம் மாறவுள்ளது.

உலகின் செல்வாக்க மிக்க மனிதர்கள் பலரை கவர்ந்திழுக்கும் வகையில் இது
அமையவுள்ளது.

இந்தத் திட்டதங்களுக்கான காணி சவூதி அரசுக்கு தேவைப்படுகின்றது. ஆனால்
இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் அரசின் திட்டத்துக்கு இசைந்து தமது பாரம்பரிய இடங்களில் இருந்து வெளியேற மறுத்துள்ளனர்.

இங்கிருந்து வெளியேற மறுத்த பழங்குடி மக்கள் சிலருக்கு சவூதி அரசு ஐம்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துள்ளது. இன்னும் பலரை வெளியேற்ற இந்தப் பகுதிகளுக்கான நீர் மற்றும் மின் விந்யோகத்தை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

இந்த பழங்குடி மக்களை விரட்டும் நோக்கில் அவர்களை அச்குறுத்தும் வகையில் அங்கு ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதிகளைச் சேர்ந்த அப்துலிலா அல் ஹோவிட்டி மற்றும் அப்துல்லாஹ்
துக்கயில் அல் ஹோவிட்டி ஆகிய இருவருக்கும் தற்போது 50 ஆண்டுகள்
சிறைத்தண்டனை மற்றும் பயணத் தடை என்பன விதிக்கப்பட்டுள்ளன.

தங்களது குடும்பத்தவர்கள் மற்றும் ஹோவிட்டி இனத்தவர்கள் இங்கிருந்து வெளியேற மறுத்ததை ஆதரித்த குற்றத்துக்காகவே அவர்கள் இருவருக்கும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சவூதி அரேபியாவின் வடமேற்கு தபுக் மாநிலத்தச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் எவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு
இப்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்தத்
தண்டனைகள் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரனானவை.

அதுமட்டும் அல்ல உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தாங்கள் மேற்கொண்டு வரும் தீய பிரசாரங்களை மேலும் தீவிரப்படுத்தவும் இவை காரணமாகி உள்ளன.

இஸ்லாத்தின் பூமி என குறிப்படப்படும் சவூதியில் 2017 முதல் இஸ்லாமிய
போதகர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்க அனுசரணையோடு
மேற்கொள்ளப்படும் இஸ்லாத்துக்கு எதிரான விடயங்களை வெளிப்படையாக
விமர்சித்ததே இவர்கள் செய்த குற்றமாகும்.

48 வயதான சாலே அல் தாலிப் என்ற பிரபல மதகுருவும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார்.

இவர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின் போதகர். மக்காவில் உள்ள சவூதி உச்ச நீதிமன்றத்தின் ஒரு நீதியரசர். தனது போதனையில் சவூதியில் இடம்பெற்று வரும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளை கண்டித்துப் பேசினார்.

அவை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான செயற்பாடுகள் என்றும் நாட்டின் சமய
மற்றும் கலாசார விழுமியங்ளை மீறும் வகையில் அவை அமைந்துள்ளன என்றும்
வெளிப்படையாகக் கூறினார்.

பெண் செயற்பாட்டாளர்களான 34 வயதான ஷல்மா அல்ஷெஹ்பாப், ஐந்து
பிள்ளைகளின் தாயான நோரா பின்த் செய்த் அல் கஹ்தானி ஆகியோருக்கு 45
வருட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

முடிக்குரிய இளவரசரும் சவூதியின் உத்தியோகப்பற்றற்ற ஆட்சியாளருமான முஹம்மத் பின் சல்மானின் அடக்குமுறை எந்தளவு கெடூரமானது என்பதற்கு சாட்சியாகவே இந்தத் தண்டனைகள் அமைந்துள்ளன என்று அலாவூத் என்ற பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பேச்சுரிமை மீறப்படுவதாக குறிப்பிட்ட குற்றத்துக்காக
மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும் கணினி நிபுணருமான ஒஸாமா காலித்
என்பவருக்கு 32 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக சவூதி அரேபியா 2022 மார்ச் மாதம் 12ம்
திகதி ஒரே தினத்தில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது.

இந்தப் பாரிய மரண தண்டனை நிறைவேற்றமானது ஐக்கிய நாடுகள் சபையினதும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் என்பனவற்றினதும் பலத்த கண்டனத்துக்கு ஆளானது.

இந்த மரண தண்டனைகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணையாளர் விடுத்த அறிக்கையில் இவை யுத்தக் குற்றங்களுக்கு ஈடானவை
என்று தெரிவித்திருந்தார்.

சவூதி அரேபியாவின் பாரிய மரண தண்டனை நிறைவேற்றங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சவூதி இயக்கம் (ESOHR) விடுத்துள்ள
அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பலருக்கு சட்டத்தரணிகளின்
ஆலோசனைகளைப் பெறுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும்
வழங்கப்படவில்லை.

அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலங்களில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. வெளி உலகத்தோடு எவ்வித தொடர்புகளுக்கும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESOHR பணிப்பாளர் அலி அபூபூஸி தெரிவித்துள்ள கருத்தில் “குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு துளி இரத்தத்தோடு கூட சம்பந்தம் அற்றவர்கள்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சவூதி அரேபியாவின் மரண தண்டனைக்கான
பொதுவான வகைப்படுத்தலின் கீழ் எந்த ஒரு பிரிவையும் சாராதவை. எல்லா
குற்றச்சாட்டுக்களிலும் அவற்றுக்கான பின்னணித் தடங்களைக் காணவே
முடியவில்லை.

சவூதி அரேபிய நீதித்துறை ஒழுங்குமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமையே இதற்கு காணம். குற்றம்சாட்டப்படவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூட அரசாங்கத் தரப்பு தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளது. இந்த மரண தண்டனைகள் இஸ்வாத்தை முற்றிலும் மீறுபவை அத்தோடு நீதிக்கு முற்றிலும் எதிரானவை” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சவூதி அரேபிய அதிகாரிகள் எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவ
இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் பலரை கைது செய்து கெய்ரோ
அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதை நன்கு தெரிந்து கொண்டே இதை செய்துள்ளனர். சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில் 2014 முதல் வசித்து வரும் 61 வயது நபரான அய்மான் ஷோஹோம் ஒரு தனியார் பாடசாலையில் அரபு ஆசிரியராகப் பணியாற்றுபவர்.

அவரை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கடந்த மே மாதம் பொலிஸார் அழைத்திருந்தனர். அவர் பின்னர் செப்டம்பர் 20ம் திகதி எகிப்துக்கு நாடு கடத்தப்பட்டுவிட்டார் என்று அவரது மகன் மஹ்மூத் என்பவர் தெரிவித்துள்ளார்.

இப்போது தனது அரசியல் கருத்துக்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றார். பெரும்பாலும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று அவரின் மகன் மேலும் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய சிறை ஒன்றில் சுமார் நான்கு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் செப்டம்பர் 20ம் திகதி தடுப்பு முகாம் ஒன்றுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று துருக்கியில் உள்ள தனது வீட்டில் இருந்தவாறு தொலைபேசி வழியாக மிட்ல் ஈஸ்ட் ஐ இணையத்துக்கு மஹ்மூத்
தெரிவித்துள்ளார்.

அய்மான் ஷோஹோம் 2014ல் எகிப்தில் இருந்து வெளியேறினார். அவரைக் கைது
செய்ய எகிப்தின் இரகசிய பொலிஸ் பிரிவு இரு தடவைகள் மேற்கொண்ட

முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே அவர் அங்கிருந்து வெளியேறினார்.
அவர் சகோதரத்துவ இயக்கத்தின் உறுப்பினர்.

அந்த இயக்கத்துக்கு சார்பான மொஹமட் முர்ஷியின் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக 2013ல் இடம்பெற்ற சதிப்புரட்சியை அடுத்து அந்த இயக்கமும் எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

எகிப்திய அரசு தனது தந்தை மீது கொஞ்சம் கூட கருணை காட்டப் போவதில்லை என்று மஹ்மூத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்தில் சுமார் 61 ஆண்டுகளின் பின் முதல் தடவையாக முன்னாள் அமெரிக்க
ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தலைமையிலான குழுவின் கண்கானிப்பின் கீழ்
இடம்பெற்ற ஜனநாயக ரீதியான தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரே
முன்னாள் எகிப்திய ஜனாதிபதி மொஹமட் முர்ஷி.

இந்தத் தெரிவின் பின் மிகவும் பிரபலமான ஒரு அரபு நாட்டில் மீண்டும் இஸ்லாம் துளிர்விடத் தொடங்கியதை அடுத்து இஸ்ரேலும் அதன் ஞானத் தந்தைகளான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய  சக்திகளும் விழிப்படையத் தொடங்கின.

அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய சக்திகள் ஒன்றிணைந்து சவூதி அரேபியாவை
முன்னிலைப்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் குவைத் என்பனவற்றின்
ஒத்துழைப்போடு எகிப்தில் ஆட்சிக் கலைப்புக்கான முன்னேற்பாடுகள்
செய்யப்பட்டன.

அதற்கான செயற்கையான உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள்
தட்டுப்பாடு என்பனவற்றை ஏற்படுத்த இந்த அரபு நாடுகள் 11 பில்லியன்
டொலர்களை செலவிட்டுள்ளன. இதன் மூலம் முர்ஷியின் ஆட்சியை
கவிழ்ப்பதற்கான எதிர்ப்பலைகள் உருவாக்கப்பட்டன.

ஆண்கள் பெண்கள் என பால் வித்தியசம் வயது வித்தியாசம் எதுவும் இன்றி நூற்றுக்கணக்கான சகோதரத்துவ இயக்க உறுப்பினர்களை கொன்று குவித்த பின் தமக்கு மிகவும் வேண்டப்பட்ட தற்போதைய ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் சிசியை இந்த தீய சக்திகள் ஆட்சியில் அமர்த்தின.

மேற்குலக நாடுகளும், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் என்பனவும் தான் இன்று இவரைப் பாதுகாத்து வருகின்றன.

இது தவிர லிபியா, ஈராக், சிரியா, யெமன் அகிய நாடுகளிலும் இந்த தீய
ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேல் சக்திகள் மேற்கொண்ட, மேற்கொண்டு
வருகின்ற எல்லாவிதமான மனிதாபிமான விரோத செயற்பாடுகளிலும் சவூதி
அரேபியா முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளது. இன்று வரை இந்த நாடுகளில் இரத்த
ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது.

சவூதி அரேபிய அரசு இன்று பலஸ்தீனத்தை, ஜெரூஸலத்தை ஏன் மஸ்ஜிதுல்
அக்ஸாவையும் கூட கைவிட்டு விட்டது. இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகளை அது கொண்டுள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் எல்லா சதித் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் தனது கால்களை அகலப் பதிப்பதற்கு எல்லா வகையிலும் சவூதி உதவி வருகின்றது.

இஸ்லாத்தின் பூமி எனப் போற்றப்படும் பூமியில் ஆட்சியில் உள்ள அரசின்
இன்றைய நிலை இதுதான்.

(முற்றும்)

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...