நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்குத் தேவையான தீர்வைக் காண தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற கடிதங்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உச்ச நீதிமன்றம் மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் மென்டிஸ் தாக்கல் செய்த இந்த அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் டபிள்யூ.டி.லக்ஸ்மன் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனு சமர்பிக்கப்படும் போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட உச்ச நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள், ஆகியோருக்கு எதிராக மாத்திரமே இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ, விஜித் மலல்கொட, எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் புவனேக அலுவிஹாரே ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கடிதப் பரிமாற்றங்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை, பயன்படுத்தியமை போன்றவற்றை நீதிமன்றில் முன்வைக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு மேலும் உத்தரவிட்டுள்ளது.