ரஷ்யாவில் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உக்ரைனில் கடமைக்காக களமிறங்க தயாராகிக் கொண்டிருந்த துருப்புக் குழுவினர் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (அக்.15) காலை ஆயுதம் ஏந்திய இருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையை ஒட்டிய பெல்கொரோட் பிராந்தியத்தில் போராட முன்வந்த மற்றும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த ஒரு குழுவினர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் நடத்திய இருவர் பயங்கரவாதிகள் என்றும், சம்பவத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறியது.
உக்ரைனுக்கு எதிரான சிறப்பு இராணுவ நடவடிக்கையில் தானாக முன்வந்து பங்கேற்க விருப்பம் தெரிவித்த நபர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் தஜிகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மதம் தொடர்பான தகராறில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறியுள்ளார்.