நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, எதிர்வரும் திங்கட்கிழமை முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மனிதனால் உருவாக்கப்பட்டது எனவும், விநியோகஸ்தர்கள், தேவையான எரிபொருள் இருப்புகளுக்கான கட்டளைகளை, வழங்கத் தவறியமையே பிரதான காரணம் எனவும் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனையடுத்து அரசாங்கத்தின் எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி மேலும் குறைக்கப்படும் என விநியோகஸ்தர் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாததால், விநியோகஸ்தர், மீண்டும் தமது கட்டளையை மேற்கொண்டுள்ளதாக சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15ஆம் திகதிகளுக்கு இடையில், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுச் தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகலில் செயற்கை எரிபொருள் தட்டுப்பாடு
முடிவுக்கு வந்து, விநியோகம் வழக்கம் போல ஆரம்பமாகும் என்று அவர்
தெரிவித்துள்ளார்.