சவூதி அரேபியா துருக்கியுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று நடைபெற்ற இராச்சியத்தின் அமைச்சரவைக் கூட்டத்தை மேற்கோள்காட்டி ,இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அறிக்கையின்படி ,நாட்டில் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க சவூதி அழைப்பு விடுத்துள்ளது.
செவ்வாயன்று மன்னர் சல்மான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக துருக்கி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முதலீட்டு அமைச்சர் காலித் அல்-ஃபாலிஹ்வை அமைச்சரவை பணிப்புரை வழங்கியது.
கடந்த மாதம், அல்-ஃபாலிஹ் ரியாத்தில் திறைசேரி மற்றும் நிதி மந்திரி நூரெடின் நெபாட்டிக்கு விருந்தளித்தார், அப்போது அவர் சவூதி வணிகர்கள் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் மற்றும் எரிசக்தி உட்பட பல்வேறு துறைகளில் துருக்கியில் முதலீடு செய்வார்கள் என்று கூறியிருந்தார்.
எண்ணெய் இறக்குமதியாளர் துருக்கி மற்றும் சவூதி அரேபியா இந்த ஆண்டு ஒரு தசாப்த பதற்றத்தைத் தொடர்ந்து உறவுகளை சரிசெய்து நகர்கின்றன. குறிப்பாக சவூதி அரேபியாவின் இஸ்தான்புல் தூதரகத்தில் 2018 ஆம் ஆண்டு சவூதி அதிருப்தி யாளர், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட பின்னர் இந்த பதற்றநிலை அதிகரித்தது.
இந்நிலையில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஏப்ரல் மாதம் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்தார், இது முதல் உயர்மட்ட விஜயம். அவரது பயணத்தைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஜூன் மாதம் துருக்கிக்கு பயணம் செய்தார்.
அரசியல், பொருளாதாரம், இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் உட்பட இருதரப்பு உறவுகளில், பொருளாதாரத் திறனை மீண்டும் செயல்படுத்துவதற்கும், ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தைத் தொடங்குவதற்கும் தங்கள் உறுதியை தலைவர்கள் அறிவித்தனர்.
சவூதி அரேபியாவிற்கான துருக்கிய ஏற்றுமதிகள் ஜனவரி-செப்டம்பர் காலப்பகுதியில் 180% வருடாந்திர அதிகரிப்புடன் 420.9 மில்லியனை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.