ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் மாணவர்களுடைய இஸ்லாம் பாடநூல்கள் விடயத்திலும், சில பிரச்சினைகள் தோன்றியதை தொடர்ந்து ஒரு சில வகுப்புகளுக்கான பாடநூல்களை கல்வி அமைச்சு விநியோகிப்பதை இடைநிறுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களை இன்று (01) கல்வி அமைச்சில் சந்தித்த முஸ்லிம் தூதுக்குழு இவ்விவகாரம் தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இது தொடர்பாக கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் ஜனாப் தாஜுதீன் அவர்களிடம் ‘நியூஸ் நவ்’ தொடர்பு கொண்டது.
இதன்போது, அவர் தெரிவித்ததாவது,
தரம் 6,7,8,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் இஸ்லாம் பாட நூல்களைப் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏதாவது மாற்றங்கள் செய்வதாயின் உலமா சபையுடன் இணைந்து கல்வி அமைச்சினுடைய இஸ்லாம் சமய பாட விடயத்துக்கு பொறுப்பாக இருக்கின்ற ஆலோசகனையும் அங்கீகாரத்தையும் பெற்று மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.
‘ஒரு நாடு ஒரு தேசம்’ என்ற செயலணியின் சிபார்சுகளை அமுலாக்கம் செய்ய வேண்டியதில்லை, ஆசிரியர் கைநூல்கள் போன்றவை இஸ்லாமிய கொள்கைக்கும் மூலக் கருத்துக்களுக்கும் போதனைகளுக்கும் மாற்றம் இல்லாத வகையில் அமைக்கப்படுவதோடு சமயம் சார்ந்த விடயங்களில் அரசியலை கலக்காமல் புத்தகங்களை வெளியிட வேண்டும்.
அதேநேரம், தற்போது இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, நவம்பர் மாதத்துக்குள் இப்பாட நூல்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
இஸ்லாம் பாட புத்தகங்கள் தொடர்பான விவகாரங்களை கல்வி அமைச்சோடு இணைந்து முஸ்லிம் விவகார திணைக்களம், உலமா சபை, மற்றும் இஸ்லாமிய சமயம் சார்ந்த பிரமுகர்கள் ஆலோசனை செய்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகத்தினை மீள் விநியோகம் செய்தல் தொடர்பான இக் கலந்துரையாடலில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் உட்பட அதன் பிரதிநிதிகளும், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சட்டத்தரணி ஷஹ்பி தலைமையிலான நீதிக்கான மையத்தின் உறுப்பினர்களும், கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அவர்களுடனான இச்சநதிப்பில் கலந்துகொண்டனர்.
இதேவேளை நீதிக்கான மய்யத்தின் பிரதிநிதிகள், முஸ்லிம் மாணவர்களுக்கு பாடநூல்களின் சமய போதனைகள் மறுக்கப்படுவதாகக் கூறி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.