துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் ஷாப்பிங் இடங்களில் ஒன்றான இஸ்திக்லால் அவென்யூவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 53பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி மற்றும் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
நகரின் தஸ்கிம் சதுக்கத்திற்கு அருகில் உள்ள இஸ்திக்லால் அவென்யூவில் உள்ள சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வெடிப்புக்கான காரணம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், துருக்கிய ஊடகங்கள் இது தற்கொலைக் குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இது நகரின் பரபரப்பான ஷாப்பிங் தெருக்களில் ஒன்றாகும் மற்றும் பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதேவேளை ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா புறப்படுவதற்கு முன் செய்தியாளர் கூட்டத்தில் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன்,
“இந்த கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளைக் கண்டறிய எங்கள் மாநிலத்தின் தொடர்புடைய பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
“வெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண்ணின் பங்கு இருப்பதாக தெரியவருகிறது,” என்று அவர் கூறினார்.
மேலும் துருக்கி நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை முன்னெடுத்தவர்கள் தோல்வியடைவார்கள் என்றும் துருக்கி ஜனாதிபதி சபதம் செய்தார்.