இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்க்ஷைரில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோரை நோக்கி முட்டைகளை வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அரசர் வரும்போது முட்டைகள் பறந்து வந்து விழுவது தெரிகிறது.
வடக்கு இங்கிலாந்து பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் பங்கேற்றிருந்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, அக்கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ‘இந்த நாடு அடிமைகளால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல…’ என்று கூறி மன்னர் சார்லஸை நோக்கி மூன்று முட்டைகளை வீசினார். அவை மன்னர் மீது விழவில்லை.
இந்த நிலையில், மன்னர் மீது முட்டைகளை வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கூடி இருந்த மக்கள் ‘கடவுளே, மன்னரை காப்பாற்றுங்கள்’ என்று முழக்கமிட்டனர். மன்னர் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். உலகில் அதிக ஆண்டுகள் ராணியாக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற அவர், ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் செப்டம்பர் மாதம் காலமானார்.