ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர்.
நல்லொழுக்கம் மற்றும் துணை தடுப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பெண்கள் பூங்காக்களுக்கு செல்வது தடை செய்யப்படும் என்ற விடயத்தை உறுதிப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானை கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
குறிப்பாக அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
6-ம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முன்னதாக ஆண்களும், பெண்களும் ஒரே நாளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்த தலிபான்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களை ஆண்களுக்கும், மற்ற நாட்களை பெண்களுக்கும் என ஒதுக்கியிருந்தனர்.
ஆனால் தற்போது பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான்கள் முழுவதுமாக தடை விதித்துள்ளனர். அதேபோல் பெண்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இந்த தடைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பூங்காவிற்கு வருகைத்தந்த பெண்ணொருவர் திருப்பியனுப்பப்பட்டார், இதன்போது ‘ஒரு தாய் தங்கள் குழந்தைகளுடன் வரும்போது, அவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும், ஏனென்றால் இந்த குழந்தைகள் நல்லவை எதையும் பார்க்கவில்லை.
அவர்கள் விளையாட வேண்டும், மகிழ வேண்டும். நான் அவர்களிடம் நிறைய கேட்டுப்பார்த்தேன், ஆனால் அவர்கள் எங்களை பூங்காவிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை, இப்போது நாங்கள் வீட்டிற்குத் திரும்புகிறோம்’, என்று அங்கு வந்த குறித்த பெண் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.