கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், கால்வாய்களை விரைவாக சுத்தப்படுத்தும் வாகனங்களுக்கு QR முறைமையின்றி எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
களனி ஆற்றின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கை மகாவலி அதிகாரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த நீர்ப்பாசனத் திணைக்களம் உடனடியாக கால்வாய்களை துப்பரவு செய்து நீர் வெளியேறும் வகையில் செயற்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் விவசாய சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அவசர வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.