கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில் பாலஸ்தீன தூதுவர் கலாநிதி ஸுஹைர் ஹம்தல்லாஹ் தார் ஸைத் முன்னிலையில் புனித பேராயர் பிரையன் உதய்க்வேயின் அனுசரணையின் கீழ் முழு தூதரகத்தையும் கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஒளிரச் செய்தது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கிரான்பாஸ் புனித ஜோசப் தேவாலயத்தின் பங்குத்தந்தை ஜூட் பெர்ணான்டோ, சீ.என்.சீ ஸ்ரீலங்காவின் தேசிய தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த, 2011 ஆம் ஆண்டின் இலங்கையின் உலக அழகுராணி ஸ்டீபனி சிரிவர்தன, இலங்கை திருச்சபையின் தந்தை சாகர பெரேரா, திருவாளர் துஷ்யந்த் வீரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் தூதரக அதிகாரிகளும் மற்றும் பல கிறிஸ்தவ பாதிரிமார்களும் கலந்து கொண்டதோடு ரத்மலான கட்புலன் மற்றும் செவிபபுலனற்றோர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களால் கிறிஸ்மஸ் கரோல் இசைக்கப்பட்டதோடு இவரகளுக்கான அன்பளிப்புப் பொதிகளும் பலஸ்தீனத் தூதுவரால் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை அழகுராணி ஸ்டீபனி சிரிவர்தன மற்றும் துஷ்யந்த் வீரமன் ஆகியோர் பலஸ்தீன சமாதான கீதம் இசைத்தனர். பெத்லஹேமின் ஒளிவிளக்குகளும் இந்த வைபவத்தின் போது ஏற்றி வைக்கப்பட்டன.
இதேவேளை இந்த வைபவத்தில் உரையாற்றிய பலஸ்தீனத் தூதுவர் கலாநிதி ஸூஹைர் ஹம்தல்லாஹ் தார் ஸைத்,
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெரூஸலம், பெத்லஹேம் உள்ளிட்ட புனித பிரதேசங்களைக் கொண்ட பலஸ்தீனினதும் பலஸ்தீன மக்களினதும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை இலங்கையில் கிறிஸ்மஸ் கொண்டாடும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதைய நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்காகவும் நாம் பிரார்த்திக்க வேண்டிய நேரமிது. எல்லாம் வல்ல இறைவன் உலகுக்கு விமோசனமளித்து எம் அனைவரையும் பாதுகாப்பானாக.
பலஸ்தீன் இயேசு நாதரின் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) புனித பிறப்பிடமாகும்.
ஏக இறைவனைப் பின்பற்றும் மூன்று மதங்களுக்கும் இது புனிதமானது. இந்த விசுவாசமும் நட்பும் நமது நம்பிக்கையைப் பலப்படுத்தி நம்மை ஒன்றிணைக்கிறது.
நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிரமங்களையும் மீறி, அமைதியானதும் மகிழ்ச்சியானதுமான சூழலை உருவாக்குவதன் மூலம், எங்கள் நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அனைத்து தடைகளையும் தொடர்ந்து கடந்து செல்வோம் என்று நம்புகிறோம்.
கொழும்பில் இந்த நத்தார் தீபத்தை ஏற்றும் போது பலஸ்தீனுக்கு உள்ளேயும் வெளியேயும் காசாவிலும் தொடராகத் துன்பப்படும் எமது மக்களையும் கொல்லப்பட்டவர்களையும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளவர்களையும் வீடற்றவர்கள் மற்றும் அகதிகளையும் நினைவு கூர்கிறோம் என தூதுவர் தனது உரையில் தெரிவித்தார்.