தற்போது வெளிவந்திருக்கும் ‘கவாதத்திர் அல்-ஜனான் வஅவாரிப் அல்-பனான்’ அரபு நூலில் உள்ளடங்கி இருப்பவை காலத்துக்குத் தேவையான விடயங்கள். அதன் மொழி நடை உயர்ந்தது. இலக்கியச் செழுமை நிறைந்த ஒரு நூல். நூலை எழுதிய பிரபல அறிஞர், எழுத்தாளர், ஆய்வாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி) அவர்கள் ஓர் அஜமியென்றாலும் நூலைப் படிக்கும்போது அது ஓர் அரபியால் எழுதப்பட்டதாகவே நம்ப வேண்டி வருகிறது.” இவ்வாறு விதந்துரைத்தார் பேராதனைப் பல்கலைக்கழக அரபு, இஸ்லாமிய நாகரிகத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். ஹனிபா (பாக்கவி) அவர்கள்.
சென்ற 2022.12.18 ஞாயிற்றுக்கிழமை அக்குறணை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யாவில் நடைபெற்ற ‘கவாதத்திர் அல்-ஜனான் வஅவாரிப் அல்-பனான்’ நூல் வெளியீட்டு விழாவில் நூல் அறிமுக உரை நிகழ்த்திய அஷ்-ஷைக் எம்.எல்.எம். ஹனிபா (பாக்கவி) இவ்வாறு குறிப்பிட்டார்.
உலக அரபு மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நூல் வெளியீட்டு விழாவை ஆலிம்கள், துறைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், தனவந்தர்கள், பள்ளிவாசல்களின் நிருவாகிகள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் வருகை தந்து சிறப்பித்தனர்.
நத்வத்துர் ரஹ்மானிய்யீன் ஒழுங்குசெய்திருந்த இப்பெரு விழா அதன் தலைவர் முப்தி எம்.எச்.எம். யூஸுப் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஷைக் அல்-ரஹ்மானிய்யஹ் உஸ்தாத் ஏ.ஸி.எம். ஜிப்ரி ஹழ்ரத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்கள்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த முக்கியஸ்தர்கள், முன்னணி முகங்கள் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர்.
அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி) அவர்கள் கல்வி, சமூக, சமய மற்றும் எழுத்துத் துறைகளுக்கு நீண்ட காலமாக ஆற்றிவரும் கனதியான பங்களிப்புகளைப் பாராட்டி, கௌரவித்து நத்வத்துர் ரஹ்மானிய்யீன் அவருக்குப் பொன்னாடைப் போர்த்தி, நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.