கால்பந்தாட்டப் போட்டிகளில் பெரும்பாலும் வீரர்களது விளையாட்டுத் திறனுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் அவர்களது நடிப்புத் திறனும் காணப்படும். ஒரு ஃப்ரீ கிக்கை, அல்லது ஒரு பெனல்டி கிக்கை பெற்றுக்கொள்வதற்காக, அல்லது எதிரணிக்கு ஒரு மஞ்சள்/சிவப்பு எச்சரிக்கையை வாங்கிக் கொடுப்பதற்காக, அல்லது இறுதி நிமிடங்களில் நேரத்தை வீணடிப்பதற்காக சிவாஜியே வந்து கால்மடித்து உட்கார்ந்து அண்ணாந்து பார்த்துக் கற்குமளவுக்கு நடிப்பார்கள். அதிலும் தற்போது Greatest of All Time (GOAT) என அவரவரது ரசிக சிகாமணிகளால் அடையாளப்படுத்தப்படும் முன்கள வீரர்கள் அனைவருமே உலகமகா நடிகர்கள்தான்.
பொதுவாகவே நாக்அவுட் ஸ்டேஜில் இந்த GOATSகள் எல்லாமே விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவதை விட நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் அசகாய சூரர்களாக இருப்பர். எனவே நாக்அவுட் ஸ்டேஜில் நடுவர்களாகக் கடமையாற்றுபவர்கள் அதீத அழுத்தத்துக்கும், நெருக்கடிக்கும் ஆளாகும் சூழ்நிலையே பெரும்பாலும் காணப்படும். இந்த அழுத்தத்தை சரியாக முகாமைத்துவம் செய்யும் நடுவர்கள் இல்லாத போது போட்டியில் விளையாட்டு வீரர்கள் வெற்றிபெறாமல் நடிகர்கள் வெற்றிபெறும் நிலை தோற்றம் பெறும்.
நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் நாக்அவுட் ஸ்டேஜில் இதுவரை பத்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் ரவுண்ட் 16இல் நடைபெற்ற எட்டு போட்டிகளிலும் மொத்தமாக 185 சந்தர்ப்பங்களில் வீரர்கள் ஆட்ட விதிகளை மீறி முறைதவறி (foul) நடந்திருக்கின்றனர். இந்த 185 ஆட்ட விதிமீறல்களின் போதும் மொத்தமாக 15 தடவைகள் மாத்திரமே வீரர்கள் மஞ்சளட்டை எச்சரிக்கைக்கு நடுவர்களால் உட்படுத்தப்பட்டனர். ஒரு தடவையாவது சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு யாரும் மைதானத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை.
ஆனால் நேற்றிரவு நடைபெற்ற காலிறுதிப் போட்டிகள் இரண்டிலும் மாத்திரம் மொத்தம் 94 தடவைகள் ஆட்ட விதிமுறை மீறல்கள் இடம்பெற்றன. அதற்கெதிராக நடுவர்களால் மொத்தமாக 21 தடவைகள் மஞ்சளட்டை எச்சரிக்கையும் ஒரு தடவை சிவப்பட்டைத் தண்டனையும் வழங்கப்பட்டன. அதிலும் ஆர்ஜென்டீனா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் மாத்திரம் 48 தடவைகள் ஆட்ட விதிமுறை மீறல்கள் இடம்பெற்றதோடு 15 மஞ்சளட்டை எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன. சிவப்பட்டைத் தண்டனை வழங்கப்பட்டதும் இதில்தான்.
Antonio Mateu Lahoz நமது பாராளுமன்றத்தில் சபாநாயகராக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சளைக்காமல் ஓடித்திரிந்து மஞ்சளட்டை எச்சரிக்கைகளை வாரி வழங்கும் கொடை வள்ளலாகவே இரண்டாவது காலிறுதியில் அவர் வலம் வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இத்தகைய உயர் அழுத்தப் போட்டிகளில் அந்த அழுத்தத்தை சமாளிப்பதற்கு நடுவர்கள் கையாளும் இரண்டு வழிமுறைகளில் ஒன்று அதிகம் எச்சரிக்கை வழங்குவது, இரண்டாவது அதிகம் அலட்சியப்படுத்துவது.
மொரோக்கோ மற்றும் ஸ்பெய்ன் அணிகளுக்கிடையில் நடைபெற்ற நாக்அவுட் போட்டியில் மொத்தமாக 29 தடவைகள் ஆட்ட விதிமுறைகள் மீறப்பட்டன. அதாவது 29 தடவைகள் நடுவர் விசிலடித்து எதிரணிக்கு வாய்ப்பை வழங்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் ஆட்ட விதிமுறை எதிரணிகளால் மீறப்பட்டதாக வீரர்கள் நடித்த அல்லது கோரிய சந்தர்ப்பங்கள் அதனை விட மிக அதிகமாக இருந்தது. எனினும் அன்றைய போட்டியில் நடுவராக செயற்பட்ட Fernando Rapallini அவற்றில் பெரும்பாலானவற்றை அலட்சியம் செய்தார்.
எனவே நடிப்பை விட்டுவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு வீரர்கள் ஆளானார்கள். அத்துடன் அவர் மஞ்சளட்டைக்குச் செல்லாமல் வாய்மூலம் வழங்கிய எச்சரிக்கைகளும் மிகவும் friendlyயாக இருந்தன. மஞ்சளட்டை எச்சரிக்கை வழங்கப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களும் கூட மிகவும் நியாயமான முறையிலேயே அமைந்திருந்தன.
நடுவரின் இந்த strategyயானது குறித்த போட்டியை முழுமனதோடு ரசிப்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தது.
Lahozஇன் strategy இதற்கு மாற்றமாக அதிகம் எச்சரிக்கை வழங்குவதாக இருந்தது. இந்தப் போட்டியில் Fernando Rapallini நடுவராக இருந்திருந்தாரென்றால், சிலபோது ஆட்ட விதிமுறை மீறல்களின் எண்ணிக்கை அரைவாசியாகக் குறைந்திருக்கும். அத்தோடு எச்சரிக்கைகளும் மூன்றிலொன்றாகக் குறைந்திருக்கும்.
VAR (Video Assistant Referee) தொழிநுட்பம் அமுலில் இருக்கின்ற நிலையில் நடுவர்களது on-field strategyயானது அடக்கியாள்வதை விட, அலட்சியப்படுத்துவதாக இருந்தால் கால்பந்தாட்டத்தை ரசிக்கவென டீவி முன் உட்கார்ந்துவிட்டு, தென்னிந்தியத் திரைப்படங்களைப் பார்த்த அனுபவத்தைப் பெறுவதிலிருந்தும் பாதுகாப்புப் பெறலாம்.
கால்பந்து வரலாற்றில் எத்தனையோ வீரர்கள் எதிரணியினரின் “அற்புதமான” நடிப்புத் திறமையால் அநியாயமாக சிவப்பட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வீரர்களை விட அதிகம் உணர்ச்சிகளை அடக்கியாளத் தெரிந்தவர்களாக நடுவர்கள் இருப்பது அவசியம். இல்லாத போது போட்டிகள் செயற்கைத்தன்மை வாய்ந்தவையாக மாறிவிடுகின்றன. தாம் அநியாயமிழைக்கப்படுவதாக வீரர்கள் நினைக்கும் போது, நடுவரின் மீதிருக்கும் கோபத்தை எதிரணியினரின் மீது காட்டும் நிலைக்கு அவர்கள் ஆளாகுவர். என்ன விலை கொடுத்தேனும் வெல்ல வேண்டும் என்ற உணர்வோடு விளையாடப்படும் நாக்அவுட் போட்டிகளில், உணர்ச்சிகளை அதிகம் அடக்கியாளத் தெரிந்த முதிர்ச்சியுள்ள நடுவர்கள் கடமையாற்ற வைக்கப்படுவது அவசியம்.
ஏனைய எந்த விளையாட்டையும் விட நடுவர்கள் அதிகமாகத் தவறுவிடும் விளையாட்டாக கால்பந்தாட்டமே இருக்கிறது என்பதே எனது அவதானம்.
(Affan Abdul Haleem)