இலங்கையின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கிய நான்கு மீனவர்களை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
நவம்பர் 26ஆம் திகதி திருகோணமலையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் மோசமான வானிலை காரணமாக தென்கிழக்கு ஆழ்கடலில் கவிழ்ந்தது.
இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், ஆபத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினரால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி விபத்தில் சிக்கிய மூன்று மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை கப்பல் “ரணரிசி” நடவடிக்கை எடுத்துள்ளதுடன், காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடும் நோக்கில் விசேட டைவிங் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான கப்பலின் இயந்திர அறையில் சிக்கியிருந்த மீனவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான கப்பலில் காணாமல் போன மற்றைய மீனவரைக் கண்டுபிடிக்க கடற்படையினர் அந்த கடற்பகுதியில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.