களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளுர் வைத்தியசாலைகளிலும் டீசல் எரிபொருளின் பற்றாக்குறை காரணமாக சுகாதார அமைப்பை பேணுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பண்டாரகம, தொடங்கொட, மத்துகம, கட்டுகஹஹேன, பதுரலிய, பிம்புர, புளத்சிங்கள, நெபாட, ஹல்தொட்ட, கோனதுவ, இங்கிரிய, மற்றும் இத்தேபான வைத்தியசாலைகள் இந்த நிலைமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதனால் சில நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விசேட பரிசோதனைகளுக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படவுள்ள ஆபத்தான நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்கு எரிபொருள் வசதிகள் இன்மையால் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், மின்வெட்டுக்கு பின் ஜெனரேட்டரை இயக்க எரிபொருள் இல்லாததால், எதிர்காலத்தில் மருத்துவமனைகள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நோயாளிகளின் அனைத்து தேவைகளையும் நோயாளிகளின் உறவினர்கள் பெரும்பாலானோர் தங்களது தனியார் வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக கூறும் சுகாதார பணியாளர்கள், இதனால் மருத்துவமனை ஊழியர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை களுத்துறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,
அப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அலுவலர் அலுவலகங்கள் நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
அதுமட்டுமில்லாது எரிபொருள் விலைகள் அடிக்கடி அதிகரித்து வருவதால், எரிபொருளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் பெருமளவில் செலவிடப்பட்டது. நிதிக்கு மீண்டும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அனைத்து துறைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.