ஜனசக்தி குழுமத்தின் இயக்குநர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக சுமார் 42 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர் குருந்துவத்தை மல் வீதி வீட்டுக்கு அருகாமையில் இருந்து பொரளை மயானத்திற்கு செல்லும் வீதியிலுள்ள சிசிடிவி கமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி மாலை ஐந்து மணியளவில் பொரளை மயான வளாகத்தில், தினேஷ் ஷாப்டர் காரில் வயர்களால் கைகளையும் கழுத்தையும் இறுக்கிக் கட்டியிருப்பதைக் கண்ட நிர்வாக அதிகாரி, மயான ஊழியர் ஒருவருடன் இணைந்து கட்டுகளை அவிழ்த்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலையுண்ட ஷாப்டரின் மனைவி கொடுத்த தகவலின்படி செயல் அலுவலர் மயானத்துக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட ஷாப்டரின் மனைவி, நிர்வாக அதிகாரி மற்றும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான பிரையன் தோமஸ் மற்றும் பொரளை மயானத்தின் ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட இருபத்தைந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் பல கையடக்கத் தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகள் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 15ஆம் திகதி மதியம் 1.30 மணியளவில் தினேஷ் ஷாப்டர் வீட்டை விட்டு வெளியேறி சுமார் அரை மணித்தியாலம் கூட்டத்திற்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இயக்குநர், செயல் அதிகாரி கிறிஸ் பெரேராவிடம், பிரையன் தாமஸைச் சந்திக்கப் போவதாகக் கூறியதாகவும் பண்ணை பகுதியில் உள்ள செயல் அதிகாரியின் கையடக்கத் தொலைபேசியில் கொலைசெய்யப்பட்ட ஷாப்டரின் டவர் லொகேஷன் போட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை நடந்த அன்று இரவு 8.15 மணியளவில் தனது மனைவியுடன் இங்கிலாந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தினேஷ் ஷாப்டர் செய்திருந்ததாகவும், மாலை 4.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைய வேண்டும். அதன் காரணமாகவே அவரது மனைவி அவருக்கு அவ்வப்போது அழைப்பு விடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை விமானப்படையின் முன்னாள் அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்கவுடன் சமுதித நடத்திய நேர்காணல் தொடர்பானது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினேஷ் ஷாப்டர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்த, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பொரளை பொலிஸ் நிலையம் உள்ளிட்ட குழுவினரின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.