இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 24 இலட்சம் மக்கள் வரையறை செய்யப்பட்டுள்ள சர்வதேச வறுமை கோட்டுக்கு கீழே சென்றுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வறிய குடும்பங்களையே அதிகளவில் பாதித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக வறியவர்கள் அல்லாத குடும்பங்களை விட வறிய குடும்பங்களின் வருமானம் பாதியாக குறைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் மக்கள் தமது சொத்துக்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். வாழ்க்கை செலவுக்காக கடனாளிகளாக மாறியுள்ளனர் எனவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வறிய குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதை கைவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையர்களில் 57 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
இவர்களில் 49 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருகின்றனர்.
சிறார்கள், கர்ப்பிணி தாய்மார், பாலுட்டும் தாய்மார், அங்கவீனமுற்ற நபர்கள், பெண்களை அடிப்படையாக கொண்ட குடும்பங்கள், இடம்பெயர்ந்தவர்கள், அகதிகள், மலையக மக்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனிடையே 57 இலட்சம் இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கஷ்டங்களை அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் மருந்து தட்டுப்பாடு காரணமாக சுமார் 20 இலட்சம் மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை வருமானம் இல்லாத காரணத்தினால், தேவையான உணவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக 25 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.