பெண்களின் பிரச்சினைகளை படமாக்கும் வகையில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற குறும்படத் தயாரிப்புப் பயிற்சி!

Date:

பெண்களின் பிரச்சினைகளை படமாக்கும் வகையில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற குறும்படத் தயாரிப்புப் பயிற்சி.

ஒடுக்கப்பட்ட நிலைமைகளில் வாழும் பெண்களில் தாக்கம் செலுத்தக் கூடிய பல்வேறு மனி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல அழுத்தமான குறும்படங்களைத் தயாரிப்பதில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்ட இரண்டு குறும்படத் தயாரிப்புப் பயிற்சிகளை ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு மையம் (CMIL) யாழ்ப்பாணத்திலும் (நவம்பர் 24-27) மட்டக்களப்பிலும் (டிசம்பர் 1-4) நடத்தியது.

“சமத்துவத்திற்கான திரைப்படம்” என்ற முன்முயற்சியின் கீழ் இந்தப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒடுக்கப்பட்ட சூழலில் வாழும் பெண்களின் வாழ்க்கை யதார்த்தத்தைப் படம்பிடிக்கவும் குறிப்பாக அவர்களின் மனித உரிமைகள் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் எவ்வாறு மீறப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்தவும் இயலுமான வகையில் இளம் பெண்கள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி அழுத்தமான குறும்படங்களைத் தயாரிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சிகள்  வடிவமைக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பில் நடைபெற்ற செயலமர்வு:

 

பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலின அடிப்படையிலான வன்முறை, காலநிலை அநீதி, டிஜிட்டல் தளத்தில் பெண் வெறுப்பு, பாலின எதிர்வினைகளின் போதாமை, அரசியல் மற்றும் சிவில் பங்கேற்பு போன்றவற்றை மொபைலைப் பயன்படுத்தி எவ்வாறு குறும்படமாகத் தயாரிக்கலாம் என்பதை இரண்டு பயிற்சிகளின் ஊடாகவும் இளம் பெண்கள் கற்றுக் கொண்டனர்.

Kinemaster™   போன்ற இலகுவாகக் கிடைக்கும் மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி எவ்வாறு வீடியோ ஒளிப்பதிவு செய்வது, எடிட் பண்ணுவது என்பவற்றை இந்தப் பயிற்சிகள் பங்கேற்பாளருக்குக் கற்றுக் கொடுத்தன. ஒவ்வொரு பங்கேற்பாளரும் உணர்ச்சிமிகு கதைக் கருக்களை உருவாக்குதல் மற்றும் பெண்களின் குரலைப் பிரதிபலிக்கும் அர்த்தமுள்ள திரைப்படங்களாக மாற்றுதல் ஆகியவற்றில் தனிப்பட்ட ரீதியில் பயிற்சியை மேற்கொண்டனர்.

தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்ற இலங்கை நாடக பயிற்சியாளரும் திரைப்பட இயக்குநருமான பேராசிரியர் இந்திக்க பெர்டினாண்டோ மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான சுமுது மலல்கம ஆகியோர் பயிற்சிகளை நடத்தினர். “சமத்துவத்திற்கான திரைப்பட இன்குபேட்டர்” முயற்சியானது கொழும்பில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தின் துணையுடன் இயங்குகிறது.

பாலின அடிப்படையிலான வன்முறைகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில், எப்படி இயல்பாக்கப்படுகிறது என்பது பற்றிய தங்கள் சொந்த நுண்ணறிவுகளைப் பயிற்சியின் போது ​​அந்தப் பெண் குறும்படத் தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நான்கு நாள் பயிற்சிப் பட்டறையின் முடிவில் தனது அவதானிப்புக்களை வெளியிட்ட குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சுமுது மலல்கம, “திரைப்படம் தயாரிப்பதில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியம். திரைப்படம் எடுக்கும் கலை பெண்களை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

திரைப்பட பட்டறையின் தொடக்கத்தில், ஒரு இளம் முஸ்லீம் பெண்ணைக் கவனித்தேன், அவள் பேசுவதற்கு மிகவும் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தாள். தன் கருத்துக்களை வெளிப்படுத்த தயக்கம் காட்டியாடு நம்பிக்கையுடன் தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் கஷ்டப்பட்டாள். இருப்பினும், அவர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ​​​​கலை இயக்க ஆதரவை வழங்கும் குழுவில் உள்ள விதிவிலக்கான திறமையாளர்களில் ஒருவராக அவர் இருப்பதைக் கண்டேன். அவளால் ஸ்டோரிபோர்டை அற்புதமாக வரைய முடியும். முழு ஸ்கிரிப்டையும் படங்களாக மாற்றும் தனித் திறமை அவளுக்கு இருந்தது. படப்பிடிப்பை அவர் மிகவும் ஆக்கப்பூர்வமாக ஏற்பாடு செய்துள்ளார். பயிற்சியின் முடிவில், அவர் மிகவும் நம்பிக்கையுடன் ஆலோசனைகளை முன்வைத்தார் எனத் தெரிவித்தார்.

இளம் பெண் குறும்படத் தயாரிப்பாளரான திவ்யா ராசதுரை கூறுகையில், “பெண்களின் வாழ்க்கை யதார்த்தத்தை திரைப்படங்களைத் தயாரிக்கும் போது, ​​உருவக அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது மற்றும் பார்வையாளர்களை உணர்ச்சி, அறிவு, ஆன்மீகம் மற்றும் உடல் ரீதியாக ஈடுபடுத்துவது முக்கியம். பெண்களை சக்தியற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும், குரலற்றவர்களாகவும், பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் சித்தரிக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஒரு பயிற்சித் திரைப்படத்தை உருவாக்கினர், அங்கு அவர்கள் கார்ப்பரேட் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளால் இளம் பெண்கள் எவ்வாறு சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை வாதித்தனர். இந்தப் படத்தைப் பார்த்த சிறுமிகள், பாலியல் துன்புறுத்தலை ஒழிக்க, சகித்துக் கொண்டிருக்காத கலாச்சாரம் தேவை என்று கூறினர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செயலமர்வு:

பாலியல் துன்புறுத்தல் பற்றிய பயம் பெண்களை தங்கள் சொந்த திறனைக் கண்டுபிடிப்பதையும்  அவர்களின் இலக்குகளை அடைந்து கொள்வதையும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதையும் பலவீனப்படுத்துகிறது என கலந்து கொண்ட பெண்கள் கூட்டாக உறுதிப்படுத்தினர். இளம் திரைப்படத் தயாரிப்பாளரும் பல்கலைக்கழக பட்டதாரியுமான தனுஷியா, “யாழ்ப்பாண சமூகத்தில் குறும்படம் LGBTQ சமூகம் மற்றும் இளம் பெண்களின் உரிமைகள் குறித்து இளைஞர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் கலாச்சாரத்தை உருவாக்குவது வாழ்நாள் சவாலாக உள்ளது எனத் தெரிவித்தார்.  பெண்கள் அமைதியாக இருக்கும்போது, ​​சமத்துவத்திற்கான நிலையான அங்கீகாரத்தை உருவாக்குவது மிகவும் கடினமாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

“பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பெண்கள் தங்கள் மௌனத்தை உடைத்து, பெண்களுக்கும் இளம் பெண்களுக்கும் எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை சவாலுக்குட்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இதைச் செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, பெண்கள் தங்கள் வாழ்க்கை யதார்த்தங்களை வெளிப்படுத்தும் விமர்சனக் கதைகளை உருவாக்கும் வகையில் அவர்களைப் பலப்படுத்துவதாகும்”என கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைகள் பல்கலைக்கழக  விரிவுரையாளர் ஆயிஷா சத்துரங்கி வட மாகாண இளம் பெண் குறும்படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

ஆயிஷாவின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், வடமாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான சிறுமிகள், பாலியல் லஞ்சம், பொதுப் போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலின அடிப்படையிலான பாகுபாடு, இணையப் பெண் வெறுப்பு, பொது வெளியில் நுழைய மறுப்பது போன்ற பிரச்சனைகள் தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளாக எடுத்துக் கூறினர். பெரும்பாலான பெண்கள், நீதி தேடுவதில், தங்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி உரக்கப் பேசுவதில்லை எனவும் அவர்கள் எடுத்துக் கூறினர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறுமிகள், பெண் குழந்தைகளின் திருமண சம்மத உரிமை மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமை ஆகியவற்றை மையமாக வைத்து இரண்டு பயிற்சித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளனர். இளம் பெண்களுக்கு கதை வளர்ச்சியில் பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் தங்கள் ஸ்கிரிப்டை வடிவமைப்பதில் தங்கள் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு பங்கேற்பாளரும் குறும்பட தயாரிப்பாளருமான திருமதி கேஷாயினி எட்மண்ட்,  பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமை பற்றிய குறும்படத்தை இயக்கினார்.  இது பாதுகாப்பான கருக்கலைப்பைச் சூழவுள்ள தப்பபிப்பிராயங்களை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. சில தந்தைகள் மற்றும் குடும்பங்கள் பெண்களின் விருப்பப்படி ஒரு துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை சிதைப்பதாக இளம் பெண்கள் சுட்டிக்காட்டினர். சில பெண்கள், இளம் பெண்களின் சம்மதம் திருமணம் என்று வரும்போது பெரும்பாலும் மதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்கள்.

இதேபோன்ற பயிற்சிகள் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் நடத்தப்படும். சமத்துவ திட்டத்திற்கான திரைப்பட காப்பகத்தின் கீழ், 76 இளம் பெண் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அதிக சமத்துவம் மற்றும் பாலின நீதியை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

சி.எம்.ஐ.எல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருகோணமலைப் பல்கலைக்கழக வளாகம் மற்றும் கொழும்பில் உள்ள விஷுவல் மற்றும் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஸ்மார்ட்ஃபோன்கள் மூலம் திரைப்படம் எடுப்பது மற்றும் பெண்களைப் பாதிக்கும் மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் டிஜிட்டல் பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து திரைப்பட ஆர்வலர்களுக்கும் இந்த டிஜிட்டல் பாடநெறி இலவசமாகக் கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...