இந்த உலகத்துக்கு வாங்கித்தான் பழக்கமே தவிர, கொடுத்து பழக்கமே இல்லை: சிறப்புக் கட்டுரை

Date:

இந்தியாவின் தமிழ்நாட்டில் வெளிவரும் ‘சமரசம்’ மாத சஞ்சிகையில் வெளிவந்த சிறப்புக்கட்டுரையை ‘நியூஸ் நவ்’ தமிழ் வாசகர்களுக்காக வழங்குகின்றோம்..

அது நடந்து எண்பது, தொண்ணூறு ஆண்டுகளாகியிருக்கும். ஆனால் முழுக்க முழுக்க உண்மையில் நடந்த நிகழ்வுதான் அது.

சிரியா நாட்டு தலைநகரமாம் டமாஸ்கஸ் நகரத்துக்கு வடக்கில் இருக்கும் கிராமத்தில் நடந்த கதை அது.

அந்தக் கிராமத்தில் ஆயிரம் பேர் வசித்தார்கள். ஆனால் ஒருத்தருக்குக்கூட எண்ணும் தெரியாது. எழுத்தும் தெரியாது.

எப்போதாவது எவருக்காவது ஏதேனுமோர் கடிதமோ ஆவணமோ வந்துவிட்டால் அதை வாசித்துச் சொல்லக்கூடிய ஆளைத் தேடி மக்கள் வெகுதொலைவு செல்ல வேண்டிய, இங்குமங்கும் அலைய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள்.

அந்தக் கடிதம் தாங்கி வந்த சூடான செய்திகூட இவர்கள் அதனைப் பிறர் வாசிக்கக் கேட்டு அறிந்து கொள்வதற்குள் ஆறிப் போய்விடும்.

இப்படியிருந்த அந்த ஊரின் நிலைமையைப் பார்த்து ஒரு சிறுவன் துடித்துப் போனான். ஈதுல் அஸ்ஃபர் அல்ஜீலானி என்பது அவனுடைய பெயர். அவனால் இந்த அவலத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே விரும்பினான்.

வீட்டாரின் மறுப்பை மீறி பக்கத்து டவுனுக்குச் சென்று பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்து மக்தப் ஒன்றில் சேர்ந்துகொண்டான்.

படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் உழைத்தான். சம்பாதித்தான். படிப்புக்காகச் செலவிட்டான்.

ஒரே ஒரு நிமிடம்கூட வீணாக்கவில்லை. முனைப்புடன் படித்தான். படித்தான். படித்தான். நான்கே ஆண்டுகளில் மற்றவர்களுக்குக் கற்றுத் தருகின்ற அளவுக்கு வல்லமை பெற்றான். பணியில் அமர்த்திக் கொள்வதற்குப் பலரும் முன் வந்தார்கள். பலதும் சொல்லி ஆசை காட்டினார்கள். அவனோ அவர்களைச் சற்றும் சட்டை செய்யவில்லை. அந்தப் பக்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

பிறந்த ஊருக்குத் திரும்பினான். தன்னுடைய பாரம்பர்ய வீட்டின் முற்பகுதியை வகுப்பறையாய் ஆக்கிக் கொண்டான். பள்ளிக்கூடம் அமைத்துப் பாடம் நடத்துவதுதான் திட்டம்.

மாணவர்கள் வர வேண்டுமே! அவர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டுமே! இதெல்லாம் நடக்கின்ற காரியமா? இந்த மண்ணில் எவருக்கும் படிப்பில் ஆர்வம் இருந்ததில்லை என்று பலரும் அவரைத் தடுக்கப் பார்த்தார்கள்.

ஆனால் தூய்மையான நல்லெண்ணமும், உயர்ந்த இலட்சியமும், அதனை அடைவதற்கான பற்றியெரிகின்ற ஆசையும் ஒருங்கே இருக்கும்போது வெற்றிக் கனியை யாரால்தான் தடுக்க முடியும்?

தொடக்கத்தில் விரல் விட்டு எண்ணத்தக்க அளவில்தான் மாணவ, மாணவிகள் சேர்ந்தார்கள். அவர்களுக்கு அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் பிரதிபலன் எதிர்பாரா பண்போடும் போதிக்கத் தொடங்கினார் ஷேக் அஸ்ஃபர்.

வெகுசீக்கிரமே அவருடைய வீடே மாணவ, மாணவிகளால் நிறைந்து விட்டது. அறிவுச்சுடர் பிரகாசமாக ஒளி வீசத் தொடங்கிவிட்டது. சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள்.

தன்னந்தனியாக, எந்த வழிவகையும் இல்லாமல் இந்த மனிதரால் இப்படிச் சாதிக்க முடியுமா என்று எவருமே கற்பனை செய்தும் பார்க்கவில்லை. ஷேக் அஸ்ஃபர் மும்முரமாக இயங்கினார்.

உழைத்தார். முறையான பள்ளிக்கூடமாக தன்னுடைய வீட்டையே ஆக்கிக் கொண்டார். வருகைப் பதிவேடு அமைத்தார். மாணவர்களின் கல்வித்தரத்தை, தேர்வுகள், மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களைத் தனியாகப் பதிவு செய்தார்.

ஒவ்வொரு மாணவருடைய பெயரையும், தந்தை பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்களையும் தனி ஏட்டில் பதிவு செய்தார். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது ஷேக் அஸ்ஃபரின் மனமும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தத் தொடங்கியது.

நாள்கள் சென்றன. கிழமைகள் வாரங்களாய், வாரங்கள் மாதங்களாய், மாதங்கள் ஆண்டுகளாய் வேகமாகப் பறந்தன.

ஷேக்குக்கு இப்போது வயது தொண்ணூறு. அவருடைய பள்ளிக்கூடத்துக்கோ எழுபது மாணவர் பதிவேடுகளால் அலமாரி நிறைந்துவிட்டது. சிரியா நாடும் இப்போது மிகவும் வளர்ந்துவிட்டது.

பட்டிதொட்டியெங்கும் அரசுப் பள்ளிகள் முளைத்துவிட்டன. ஷேக்கின் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் படித்து முடித்த பிறகு அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் மாற்றலாகிச் சென்றார்கள்.

அவர்கள் படித்துப் பட்டம் பெற்று பெரும் பெரும் பதவிகளில் அமரத் தொடங்கினார்கள். எப்போதாவது ஷேக்கைப் பார்க்க வருவார்கள்.

ஷேக்கின் பள்ளியோ வழக்கம்போல் உயிர்த்துடிப்போடு இயங்கியது. உலகம் முழுவதும் மணியடித்தால் மாணவர்கள் மகிழ்வோடு வெளியே ஓடுவார்கள். ஆனால் ஷேக்கின் பள்ளி மாணவர்களோ பள்ளிக்கு வரும்போதுதான் ஓடி வருவார்கள்.

பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதோ தயங்கித் தயங்கிச் செல்வார்கள். எல்லாம் ஷேக் அவர்களின் தனிப்பட்ட அன்பு கலந்த போதனை செய்த மாயம். எப்போதாவது சீக்கிரம் கிளம்ப வேண்டுமென்றால் மாணவர்களை வெளியேற்ற பெரும் பாடுபட வேண்டியிருக்கும்.

இந்த எழுபதாண்டுகளில் இந்த ஷேக் ஒரே ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் பாடம் நடத்தியிருக்கின்றார் என்று மற்றவர்கள்தான் கணக்குப் பார்த்தார்கள்.

ஆனால் ஷேக் ஒருநாளும் கணக்குப் பார்த்ததில்லை. அவர் பாடம், வகுப்பு, மாணவ, மாணவிகள் என்று தன்னுடைய அன்றாட அலுவலில் மூழ்கியிருந்தார்.

அவரிடம் பாடம் பயின்றவர்கள் இன்று நாடு முழுக்க வெவ்வேறு பதவிகளில் இருந்தார்கள். வெளிநாடுகளில் வியாபாரம் செய்தார்கள்.

பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்தார்கள். பெரும் பணக்காரக் குடும்பங்களில் மணம் முடித்தார்கள். மாநகரத்துப் பள்ளிவாசல்களில் கதீப்களாக, முஃப்திகளாக செல்வாக்குடன் இருந்தார்கள்.

எல்லோருக்கும் தொடக்கப் புள்ளியாக ஷேக் இருந்தார். ஒருபோதும் ஒருவரிடமும் எதையும் பெற்றதுமில்லை. விரும்பியதுமில்லை.

பள்ளிக்கூடம். பள்ளிக்கூடம். பள்ளிக்கூடம் என்று அர்ப்பணிப்புடன் இயங்கினார் அவர். மாணவ, மாணவிகள் கற்றுக்கொள்வதைப் பார்க்கின்றபோது அவருடைய முகத்தில் தோன்றுகின்ற மலர்ச்சியை வேறு எங்கும் பார்க்க முடியாது. மனநிறைவோடு வாழ்ந்து வந்தார்.

கடுமையான உழைப்பாளி. அதனால் எந்த நோயும் அண்டவில்லை. இன்று மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பிறகு ஆயாசமாக, சோர்வாக உணர்ந்தார் அவர்.

இரண்டு அடி எடுத்து வைப்பதற்கும் சிரமப்பட்டார். என்ன ஆயிற்று, எனக்கு? என்று நினைத்தவாறு அப்படியே அமர்ந்து விட்டார்.

இதற்கு முன்னால் எப்போதுமே இப்படி நடந்ததில்லையே. என்னவாக இருக்கும்? மனத்துக்குள் பற்பல கேள்விகள்.

இடைப்பட்ட நேரத்தில் தபால்காரர் வந்து கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டுச் சென்றார். தபால் கொடுக்கின்ற நேரமா இது என்று நினைத்தாலும் அதனை எடுத்து இப்படி அப்படித் திருப்பிப் பார்த்தார். கல்வி அமைச்சகத்திலிருந்து வந்த கடிதம் அது.

பிரித்துப் பார்த்தால் இரண்டே வரிகள்தாம் இருந்தன.

ஷேக் அஸ்ஃபர்

முதல்வர், தொடக்கப்பள்ளி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தொடக்கப்பள்ளியை நடத்துகின்றவர்கள் குறைந்தபட்சம் அரசுப் பள்ளியில் படித்து முடித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சகம் புது ஆணை பிறப்பித்திருக்கின்றது.

உங்களிடம் எந்தச் சான்றிதழும் இல்லை. எனவே உங்களின் பள்ளிக்கூடம் உடனடியாக மூடப்பட வேண்டும். இல்லையேல் உங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

வஸ்ஸலாம்.

ஷுக்ரி அத்னான் இப்ராஹீம்

(முதன்மைக் கல்வி அதிகாரி)

படித்து முடித்ததும் ஷேக் இடிந்து போய் அமர்ந்துவிட்டார். திடீரென்று ஏதோ பொறி தட்டியது. ஷுக்ரி ..

ஷுக்ரி கேள்விப்பட்ட பெயராக இருக்கின்றதே என்று நினைத்து துள்ளி எழுந்தார். அலமாரியைத் திறந்தார்.

ஆம். ஷுக்ரி இப்னு அத்னான் அவருடைய பள்ளியில்தான் இருபதாண்டுகளுக்கு முன்பு படித்திருக்கின்றான்.

பிறகு அத்னான் என்கிற பெயர்கூட அறிமுகமான பெயராகத் தெரிகின்றதே என்று மேலும் மாணவர் பதிவேடுகளில் தேடினார். அத்னான் பின் இப்ராஹீம்கூட அவருடைய மாணவர்தான்.

நாற்பதாண்டுகளுக்கு முன்னால் இதே பள்ளியில் படித்திருக்கின்றார். தொடர்ந்து இப்ராஹீம்கூட தெரிந்த பெயராக இருக்கின்றதே என்று தேடினார். தாத்தா இப்ராஹீம்கூட அறுபதாண்டுகளுக்கு முன்பு இதே பள்ளியில் படித்து முடித்திருக்கின்றார்.

ஆக கல்வித்துறை அதிகாரி மட்டுமல்ல, அவருடைய தகப்பனாரும் பாட்டனாரும்கூட இதே பள்ளியில்தான் அறிவுக் கண் திறந்திருக்கின்றார்கள்.

எதனை இன்று அவர் சட்டவிரோதமான பள்ளி என்று அறிவித்திருக்கின்றாரோ அந்தப் பள்ளியில்தான் அவருடைய வம்சமே உருவாகியிருக்கின்றது.

இதுதான் மனிதர்கள் உருவாக்குகின்ற சட்டங்களின் இலட்சணம். சட்டங்கள், விதிகள், நடைமுறைகள் அனைத்துமே சுயநலத்தால் உருவாக்கப்பட்டவைதாம். ஆதாயங்களுக்காகக் கட்டமைக்கப்பட்டவைதாம்.

ஷேக் அவர்களின் உலகமே நிலைகுலைந்து போனது. ‘ஆ’ என அலறினார். அந்த அலறலில் சூடும் இருந்தது. ஆசுவாசமும் இருந்தது. கை கால்கள் பனிபோல் சில்லிட்டுவிட்டன.

தலை வியர்வையால் நனைந்து விட்டது. ஷேக் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சரிந்தார். பள்ளிக்கூடத்திலேயே மரணித்துவிட்டார்.

ஊர் மக்களால் நம்பவே முடியவில்லை. பள்ளியை விட்டுவிட்டு ஷேக் ஒருநாள் கிளம்பிச் சென்று விடுவார் என்று அவர்கள் நினைத்தும் பார்த்ததில்லை. ஆனால் ஷேக் போய்விட்டார்.

அடுத்த நாள் டமாஸ்கஸ் நகரத்திலிருந்து வெளியாகின்ற ஏகப்பட்ட நாளிதழ்களில் ஒன்றில் உள் பக்கத்தில் பெட்டிச் செய்தியாய் வெளியாகி இருந்தது. தொடக்கப்பள்ளி முதல்வர் ஷேக் ஈதுல் அஸ்ஃபர் அல்ஜீலானி இறைவனிடம் மீண்டுவிட்டார்’.

எழுபதாண்டுகாலம் ஓயாமல் ஒழியாமல் அல்லும் பகலும் உழைத்தவருக்கு உலகத்திடம் கொடுப்பதற்கு எதுவும் இருக்கவில்லை.

அதனால் என்னதான் கொடுக்க முடியும்? யோசித்துப் பார்த்தால் இந்த உலகத்துக்கு வாங்கித்தான் பழக்கமே தவிர, கொடுத்துப் பழக்கமே இல்லை என்பது விளங்கும்.

மறுமை வெற்றியும் இறைவனின் உவப்பும்தாம் என்றென்றும் ஷேக் போன்றவர்களை ஊக்குவிக்கின்ற உந்துசக்திகளாய் இருக்கின்றன.

இருந்து வந்துள்ளன. “இன்னும் அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர், அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்’ (திருக்குர்ஆன் 53:40,41) என்றே குர்ஆன் அறிவிக்கின்றது.

ஷேக்கின் மரணத்தோடு வரலாற்றின் ஒரு பொற்காலம் முடிந்தது. ஆனால் எவரும் அவரைப் பற்றி எழுதவில்லை.

ஏனெனில் அவர் ஒன்றும் புகழ்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் இல்லை. ஒரு பெயர் இல்லாத தொடக்கப்பள்ளியை நடத்தி வந்த சாதாரணமான ஆசிரியர்.

வரலாற்றுப் பக்கங்களைக் குண்டு குண்டான பெயர்களைக் கொண்டுதான் நிரப்ப முடியும். செயல்வீரர்களோ செயல்வீரர்களாகவே இருந்து மரணித்து விடுகின்றார்கள்.

நன்றி: சமரசம் (இந்தியா-தமிழ்நாடு)

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...