2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் அரசாங்க அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா ரூ.75 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு ரூ. 50 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுக்கள் மீதான விசாரணைகளும் கடந்த 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.
இந் நிலையில் குறித்த மனுக்களின் தீர்ப்பு, இன்று 12 ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.
தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு சத்தோலிக்க மதகுருமார், சங்கிரிலா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ், மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்.
இதேவேளை பிரதிவாதிகளில் ஒருவராக பெயரிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என உயர் நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பெர் 26 ஆம் திகதி அறிவித்திருந்தது
வழக்கை விசாரணை செய்த நீதியரசர்கள் குழாமில் உள்ளடங்கும் நீதியரசர் தெஹிதெனிய நாளை 13 ஆம் திகதியுடன் ஓய்வு பெறும் நிலையில், இன்று 12 ஆம் திகதி குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.