முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத சட்டத்திருத்தத்திற்கு எதிராக கண்டனப் பேரணியொன்று புத்தளம் மொஹிதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் இடம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இந்த கண்டனப் பேரணி இடம்பெற்றது
புத்தளம் பெரிய பள்ளிவாசல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளை மற்றும் புத்தளம் சிவில் அமைப்புகள் இணைந்து முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில் புத்தளம் சமூகமும் புத்தளம் முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்படுவதை கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதிப் பேரணியில் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
01. எமது நாட்டில் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக சட்டரீதியாக நடைமுறையில் இருந்து வரும் காதி நீதிமன்றம் உள்ளடங்களான முஸ்லிம் தனியார் சட்டம் இந்நாட்டு முஸ்லிம்களின் தவிர்க்க முடியாத உரிமை என்பதை அழுத்தமாக கூறி வைக்க விரும்புகிறோம்.
02.விவாக விவாகரத்து சட்டத்தில் (MMDA) பொருத்தமான திருத்தங்களை சகல தரப்பினரின் அங்கீகாரத்துடன் மேற்கொள்வதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதுடன் வெளிப்படை தன்மையற்ற வகையில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் விருப்பத்துக்கு மாற்றமாக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான திருத்தங்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
03. காதி நீதிமன்ற முறைமையில் காணப்படும் சில குறைபாடுகள் அல்லது காதி நீதிபதிகள் ஒரு சிலரின் குறைபாடுகள் காரணமாக ஒட்டுமொத்த காதிமுறையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற சிலரின் நியாயமற்ற அறிவுபூர்வமில்லாத கருத்துக்களை குறித்து எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
04. திறந்த மனதோடு இந்த முறைமை குறித்து தேடி அறியுமாறும் அதன் நன்மைகள் குறித்து விளங்குமாறும் குறித்த தரப்பினரை வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
05. விவாக விவாகரத்து சட்டத்திலிருந்து பலதாரமனத்தை ஒழித்தல் வலி அதிகாரத்தை இல்லாதாக்குதல் மூலம் சமூகத்தில் மேலும் குடும்ப சீர்கேடுகளும் கலாசார சீரழிவுகளுமே ஏற்படும் என்பதை காதி முறையை எதிர்ப்போர் சிந்திக்க மறுப்பது குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிகின்றோம்.
06. முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாவிடின் புத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களை கொழும்புக்கு அழைத்து வந்து சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோம் என நீதி அமைச்சரை அச்சுறுத்தி பிழையாக வழிநடத்த முனைந்தவர்களை புத்தளம் மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்
இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஜம்மியத்துல் உலமா புத்தளம் கிளை புத்தளம் பெரிய பள்ளிவாயல் மற்றும் புத்தளம் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த கண்டன பேரணியின் போது இக்கண்டன அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டது.