இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி கர் இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் பலதரப்பு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஹினா, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இராஜாங்க அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜப்பானின் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற துணை அமைச்சர் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்புகளும் இடம்பெற்றன.
இந்நிலையில், பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியை கௌரவித்ததுடன் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், அவரது திறமையான தலைமையின் கீழ் நாடு முன்னேறும் மற்றும் செழிக்கும் என்று நம்புகிறேன். இந்த கடினமான காலங்களில் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாகிஸ்தான் முழு ஆதரவை வழங்கும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஜனாதிபதி ரணில் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கை கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்பது இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதர உறவுகளை பிரதிபலிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இதேவேளை இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்துப் பேசிய இராஜாங்க அமைச்சர், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அன்பான விருந்தோம்பல் மற்றும் சிறப்பான ஏற்பாடுகளை பாராட்டினார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பதற்காக இரு தரப்பிலிருந்தும் உயர்மட்ட பயணங்களின் முக்கியத்துவத்தை இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது. சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு இராஜாங்க அமைச்சர் அலி சப்ரிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் பாதை குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்ததுடன், பல்வேறு துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, இராஜாங்க அமைச்சர் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமன் மற்றும் இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட ஜப்பானின் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற துணை அமைச்சர் ஷுன்சுகே டேக்கி ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.