புகையிரத திணைக்கள ஊழியர்களின் சம்பளம் பதவி உயர்வுகள் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் விசேட கலந்துரையாடலொன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
புகையிரத திணைக்களத்தில் தற்போதுள்ள ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ள நிலையில், புகையிரத சேவையில் 3000 பேரை இம்மாதத்திற்குள் இணைத்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
தெரிவுசெய்யப்பட்டவர்களை அவர்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள புகையிரத நிலையங்களில் பணியமர்த்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
புகையிரத திணைக்கள ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக விசேட பிரிவொன்றை அமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவை உடனடியாக கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
புகையிரத திணைக்களத்தின் பல்வேறு அதிகாரிகள் தொடர்பிலான விசாரணைகளை சுயாதீன விசாரணைக் குழுவின் அனுசரணையுடன் மிகவும் சம்பிரதாயமான முறையில் நடத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தொழிற்சங்கங்கள், ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள் என தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பயணிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அசௌகரியம் இன்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.