ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது வணிக வகுப்பில் பயணிப்பதைத் தடைசெய்து விசேட சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த சுற்றறிக்கை இந்த வாரத்திலேயே வெளியிடப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சின் செயலாளர்கள், அமைச்சரவை செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் உத்தியோகபூர்வ அரசாங்க வெளிநாட்டு பயணங்களின் போது வணிக வகுப்பு வசதிகளை அனுபவிக்கும் உயர் அரசாங்க அதிகாரிகளாவர்.
நாட்டின் மோசமான நிதி நிலைமையினால் மக்கள் அவதியுறும் வேளையில் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியமானது.
எனவே அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் கொள்கைக்கு அமைவாக அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு பயணங்களின் போது அரச உயர் அதிகாரிகள் தங்கும் ஹோட்டல்களுக்கும் இந்த சுற்றறிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.