ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
இன்று உலக வானொலி தினம், ஒரு தரமான வானொலி சேவை என்பது நல்ல நிகழ்ச்சிகளை, பொழுதுபோக்கு அம்சங்களை தொகுத்து வழங்குவது மட்டுமே மிக முக்கியமான ஒன்றாக இன்றைய காலங்களில் பார்க்கப்படுகிறது.
ஆனால் அதற்கு முன்பெல்லாம், சாதாரண சமூகத்தில் அதுவும் தாங்கள் வசிக்கும் இடத்தில் அன்றாடம் நடைபெறும் முக்கிய பிரச்னைகளையும், சிக்கல்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு, பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பினை உருவாக்கி தருவதே வானொலி நிகழ்ச்சிகளின் முக்கிய பங்காக இருக்கும்.
அந்த காலத்தில் ஒரு தகவலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றிய முதல் ஊடகம் எதுவென்றால் அது வானொலி தான்.
ஆனால் தற்போது நாகரிக வளர்ச்சியால் நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்து டி.வி, மொபைல் போன், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல்களை பரிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டாலும், வெகுஜன ஊடகத்தின் முன்னோடி சாதனமாக இன்றும் இருப்பது வானொலி மட்டும் தான். இதற்கு டீ கடை சந்துகளும், ஆட்டோக்களில் ஒலிக்கும் பல பாடல்களே சாட்சி.
இப்படிப்பட்ட வானொலியானது இத்தாலியை சேர்ந்த மார்க்கோனி என்பவரால் கடந்த 1888 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1901 ஆம் ஆண்டு முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
சொல்லப்போனால் மார்க்கோனிக்கு முன்னரே ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே, ஹென்றிச் ஹெர்ட்ஸ் என பல விஞானிகள் மின்காந்த அலைகளை ஒலி அலைகளாக மாற்றி டிரான்ஸ்மீட்டர்களை உருவாக்க முயன்றிருந்தாலும், முழு வடிவமாக, ரேடியோவாக வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை குலீல்மோ மார்க்கோனி அவர்களையே சேரும்.
பின் இது வளர்ச்சியடைந்து உலகம் முழுவதும் பரவ துவங்கி கொந்தளிப்பு மிக்க நேரங்களில் முக்கிய இயங்குதளமாக செயற்பட்டு (உலக போர், புரட்சிகள்), சமூகங்களை ஒன்று திரட்டி வேலைக்குச் செல்லும் வழியிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமைதியான நேரங்களிலும், மோதல் மற்றும் அவசர நிலைமைகளிலும் இந்த வானொலிகளானவை தகவல் மற்றும் அறிவுக்கான உயிர்நாடியாக விளங்கியதால் பல நாடுகளில், நகரங்கள் முதல் கிரமங்கள் வரை வானொலியின் குரலோசை கேட்க துவங்கியது .
நமது இந்தியாவை பொறுத்தவரை 1927 ஆம் ஆண்டு மும்பை, மற்றும் கொல்கத்தாவில் முதன் முதலாக வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1936 ஆம் ஆண்டு மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டு, பின்னர் தன்னாட்சி வழங்கப்பட்ட ஸ்தாபனமாக பிரசார் பாரதி மாறியது.
தற்போது தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, உதகை, திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்கால், நாகர்கோவில், கொடைக்கானல் ஆகிய இடங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இது தவிர இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இங்கு உண்டு.
அதேபோல் இன்றைக்கு இந்தியாவை பொறுத்தவரை ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட 16 அயல்நாட்டு மொழிகளிலும், 24 இந்திய மொழிகளிலும் என 208 ஒலிபரப்பு நிலையங்களோடு அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இப்படி பல பெருமைகளையும், பல வரலாறுகளையும் படைத்து பயணித்து வரும் ‘வானொலி’ இன்று பலரது பயன்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது என்பது வருத்தத்திற்குரிய உண்மை.
புதிய சாதனங்கள், புது புது அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்மை முன்னோக்கி கொண்டு சென்றாலும், பின்னோக்கி திரும்பி பார்த்து பல விஷயங்களை அசை போட, மலரும் நினைவுகளை நம் மனதில் கொண்டு வர முயலும் ஒரே ஊடகம் என்றால் அது நம் வானொலி மட்டும் தான்.
அப்படிப்பட்ட ‘வானொலி’கென்று ஒரு தினம் வேண்டும் என முடிவு செய்த உலக நாடுகள். கடந்த 2011ஆம் ஆண்டு ஐ.நா-வின் 36ஆவது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின், நவம்பர் 3ஆம் திகதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
அதன் பின்னர் பல நாடுகளின் ஒப்புதலோடு பெப்ரவரி 13உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.
அதன் படி முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் கடந்த 2012 பிப்ரவரி 13 -இல் கொண்டாடப்பட்டது.
அன்று போர்க்காலங்களில் முக்கிய ஊடகமாக செயல்பட்ட வானொலிகள், இன்று போரினை கடந்த அமைதியை தேட முனைகிறதென்றால்… அதற்கு நாமும் குரல் கொடுப்போம், கண்களுக்கும் ஓய்வளித்து கொஞ்சம் செவிகளுக்கு செயல் கொடுத்து கற்பனையை வளர்த்திட முயன்றிடுவோம்.