எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் கிம்புலாவல பகுதியில் உள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
கிம்புலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் கீழுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
வீதி விபத்துக்கள் உட்பட பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர்கள் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் சுமார் 3000 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் கிம்புலாவல பிரதேசமும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய விமல் விரவங்ச, ஜே.சி. அலவத்துவல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் இவ்வாறான தீர்மானங்களினால் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அமைச்சர் பந்துல குணவர்தன பயணிக்கும் போது, கிம்புலாவல வீதியில் அதிக வாகன நெரிசல் காணப்படுவதால், வாகன நெரிசலுக்கு காரணமான இந்த வீதி உணவு விடுதிகள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.