சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மற்றும் பல சர்வதேச வங்கி கணக்குகள் இருப்பதாகவும், உகண்டாவுக்கு பணம் அனுப்பியதாகவும் தம்மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு தம்மீதும் தமது குடும்பத்தினர் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கூறப்படுகின்ற பொய் என்றும், உண்மையில் அவ்வாறான சொத்துக்கள் இருந்தால் அவற்றை அரசாங்கத்திடமும் நாட்டிடமும் ஒப்படைக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை தனது குற்றச்சாட்டை யாராவது நிரூபித்து அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவந்தால், அந்தப் பணத்தில் இலங்கையில் உள்ள அனைத்துக் கடன்களையும் அடைத்துவிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகில் எங்கும் ராஜபக்சர்களுக்கு இதுபோன்ற கணக்குகள் இருப்பதாக இதுவரை எந்தத் தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை என தற்போதைய ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கூறியிருப்பதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.