அண்மையில் துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாக கொண்டு நிகழ்ந்த கோர நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.
ரிக்டர் அளவுகோளில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது.
துருக்கியில் 43,500 மேற்பட்டோர் மற்றும் சிரியாவில் 6,000க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 50,000க்கும் மேற்பட்டோர் இந்த கோர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
பேரிடரில் சிக்கித் தவிக்கும் துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்பி உதவிகளை செய்தன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் புணரமைப்பு பணிகளை துருக்கி அரசு மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பின் காரணமாக சுமார் 5.2 லட்சம் குடியிருப்புகளை கொண்ட 1.6 லட்சம் கட்டங்கள் சேதமடைந்து பாதிப்புகளை கண்டுள்ளது.
துருக்கி அரசு அளித்த தகவலின் படி, சுமார் 8.65 லட்சம் பேர் கூடாரங்களிலும், 23,500 பேர் கண்டெய்னர் வீடுகளிலும், 3.76 லட்சம் பேர் டார்மெட்டரி அல்லது பொது வசிப்பிடங்களிலும் தற்போது அடைக்கலம் புகுந்துள்ளனர்.
எனவே, சுமார் 15 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக துருக்கி அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இவர்களுக்கு குடியிருப்புகளை கட்டித் தரும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.
இந்த கட்டங்களை ஓராண்டு கால அளவில் விரைந்து கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளை, பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்தி இந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள அரசுக்கு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.