உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் வகையில் ‘OR’ அமைப்பை தயாரிப்பதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு தேவையான அமைப்பை தயார் செய்யுமாறு அமைச்சின் செயலாளரிடம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அவற்றிற்கு தேவையான எரிபொருளின் அளவு விபரங்கள் அடங்கிய அறிக்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வாகனம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 100 லீற்றர் எரிபொருள் கோரப்படுவதாகவும், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒரு பகுதிக்கு மாத்திரமே இவ்வளவு அதிகபட்ச எரிபொருள் தேவைப்படுவதாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவது அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றார்