மாவனல்லை உள்ளூராட்சி சபையின் தலைவர் நோயல் தசந்த ஸ்டீபன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பிராந்திய சபையின் தலைவரின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அதன் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உப தலைவர் கோரலேகெதர பியதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மாவனல்லை பிராந்திய சபையின் தலைவர் நோயல் தசந்த ஸ்டீபன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இதன்படி, 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க உள்ளூராட்சி சபை சட்டத்தின் 185 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை தலைவர் தனது கடமைகளை செய்யும் போது செய்தாரா என்பதை ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹன அனுரகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சப்ரகமுவ மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.