உலக தாய் மொழிகள் தினம்: ‘அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்”

Date:

இன்று (21) உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு ‘பிபிசி’ தமிழில் வெளிவந்த சிறப்பு கட்டுரையை வாசகர்களுக்கு தருகின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் திகதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது.

இன்று (21) உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிபிசி தமிழில் வெளிவந்த சிறப்பு கட்டுரையை வாசகர்களுக்கு தருகின்றோம்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது.

இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது.

ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பெப்ரவரி (21) ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது.

இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பெப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார்.

தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் திகதியை  சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது.

இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் திகதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதைப்படிக்கின்ற போது, வங்கதேசத்தைப் போல் இந்தியாவில், தமிழ்நாட்டில் 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பலருக்கும் நினைவிற்கு வரலாம்.

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில், நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் திகதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அன்றைய தினம் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால், இது ஏன் உலக அளவில் கவனம் பெறவில்லை? என்கிற கேள்வி எழும். வங்க தேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது உள்நாட்டில் அந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வங்கதேசம் தனி நாடாகவும் உருவாவனது.

அந்நாட்டின் பிரதிநிதி உலக தாய்மொழிகள் தின, தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை, யுனெஸ்கோவும் அங்கீகரித்தது.

ஆனால், தமிழ் மொழி காக்கும் போராட்டம் கவனத்தை பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் மொழிப்போரில் பங்கேற்றவர்கள்.

கவிஞர் அறிவுமதி பிபிசி தமிழிடம் கூறுகையில்,

”வங்கதேசத்தில் நடைபெற்றதை விட பன் மடங்கு வீரியமான போராட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்றது. ஆனால், வழக்கமான நம்முடைய பெருந்தன்மையால், மொழிப் போராட்ட வரலாறு யுனெஸ்கோ வரை செல்லவில்லை.

பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஈகம் பெரும் வணக்கத்திற்குரியது. ஈடு, இணையற்றது. உலகத்தில் உள்ள மொழிகளைக் காக்க வேண்டும் என்று யுனெஸ்கோ உலக தாய்மொழி தினத்தை அறிவித்துள்ளது.

ஒரு குழந்தை முதலில் அறிகின்ற ருசி தாய்ப்பால். அந்த குழந்தை முதலில் உணர்கின்ற மொழி தாய் மொழி.

எனவே, தாய்ப்பாலை போல் தாய்மொழியும் நம் உயிர்ப்பானது. உணர்வோடு கலந்தது. தாய்மொழி என்பதும் ஒரு மொழிதானே என்று கடந்து போய்விட முடியாது. நம்முடைய 3 ஆயிரம் ஆண்டு மரபு, பண்பாடு, கலாச்சாரத்தை நினைவு அடுக்குகளில் கடத்தி வருகிறது.

கருவில் இருக்கும் போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும்.

ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை தொடரச் செய்யும்.” என்கிறார்.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...