முஹம்மது ராபித் (ஓட்டமாவடி)
இலங்கையில் இலவச கல்வி 1945ம் ஆண்டு பத்தாம் மாதம் cww கன்னங்கரவினால் ஆரம்பிக்கப்பட்டது.
அன்று தொட்டு இன்றுவரை இலங்கையில் இலவச கல்வியே காணப்படுகிறது இதன் மூலம் இலங்கை நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலை செல்லும் பிள்ளையும் நன்மை அடைந்து கொண்டிருக்கிறது.
காலங்கள் மாற மாற ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களும் கல்விக் கொள்கையை மாற்றி மாற்றி வந்துள்ளார்கள்.
இதன் காரணமாக நவீன உலகை எதிர்கொள்ள தேவையான கல்விக் கொள்கைகள் சமகாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
சமகாலத்தில் இலவச கல்வி பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. காரணம் கல்வி தற்போது ஒரு பொருளாதாரம் ஈட்டுவதற்கான முதலீடாக கொள்ளப்படுகின்றது.
அண்மைய 15 வருடங்களுக்கு முன்னர் பாடசாலையில் கற்பிக்கும் ஆசான்கள் தங்களது பாடத்திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மாணவர்களை பாடசாலைக்கு வரவழைத்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி தங்களது பொன்னான நேரங்களை மாணவர்களின் கல்விக்காக செலவிட்டார்கள்.
அன்றைய காலங்களில் ஒரு சில தனியார் கல்வி நிலையங்கள் காணப்பட்டாலும் பாடசாலை கல்விக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாணவர்களும் பெற்றோரும் இதற்கு முக்கியத்துவம் அளித்தார்கள்.
ஆனால் சமகாலத்தில் ஆசான்களின் மனோநிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது காரணம் பாடசாலையில் கற்பிக்கும் ஆசான்கள் தனியார் கல்வி நிலையங்களிலேயே அதிக நாட்டம் வைத்துள்ளனர்.
தற்போது தனியார் கல்வி என்பது உரிமையாளர்கள், ஆசான்கள் மூலமாக சூட்சுமமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஊட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவு பாடசாலைகளில் எது நடந்தாலும் பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் எப்படியாவது தனியாருக்கு அனுப்பி பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும் என்ற மனோநிலை வளர்க்கப்பட்டுள்ளது.
இதனை ஆசான்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பிள்ளைகளும் தனியாரில் கற்றால் தான் வெற்றி அடையலாம் என்ற மனோநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த பக்கமாக பாடசாலைகள் தனியார் கல்விக்கு மறைமுகமான ஆதரவை வழங்கி வருகின்றனர். காரணம் உலக வங்கி வழங்கும் கடனுக்கு பாடசாலைகள் முன்னேற்ற அறிக்கை வழங்க வேண்டும்.
எனவே தான் பிள்ளைகள் எங்கு சென்றாவது கற்று பாடசாலைக்கு பெறுபேறுகளை காட்ட வேண்டும் என்பதே நோக்கமாகும்.
ஆசான்கள் என்போர் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்கள் ஒரு ஆரோக்கியமான சமூக உருவாக்கத்தின் ஆணிவேர். இன்று இந்த ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது.
காரணம் இலங்கை நாடு அண்மைய ஆண்டுகளில் கொரோனா நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றது.
இலங்கையை பாதித்த கொரோனா எனும் கொடூர நோயினால் மாணவர்களின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.
காரணம் பாடசாலைகள் மூடப்பட்டு வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இதன் காரணமாக பாடசாலை கல்வித் திட்டத்தை நிறைவு செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே zoom தொழிநுட்பம் ஊடாக மாணவர்கள் இலவசமாக இதன் பயனைப் பெற்றாலும் அதிகமான ஆசான்கள் பணம் பெற்று கற்பித்தலை மேற்கொண்டனர்.
தற்போது நாடு சமநிலை அடைந்தாலும் zoom ஊடான ஆசான்களின் தனியார் கல்வி கைவிடப்படவில்லை.இதன் காரணமாக பாடசாலை தவணை காலத்தை பின் தள்ள வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
தற்போது புதிய வருடம் ஆரம்பித்தாலும் மார்ச் இறுதியில்தான் பாடசாலை தவணைக்காலம் நிறைவு பெறுகின்றது.
இவ்வாறு இருக்க மாணவர்கள் தற்போதைய ஆண்டில் கற்றுக் கொண்டிருக்கும்போது அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டத்தை தனியாரில் ஆரம்பித்துள்ளார்கள்.
பாடசாலை பற்றிய எந்த அக்கறையும் இல்லா பெற்றோர்கள் தங்கள் சுயநலத்திற்காக இங்கு அனுப்புகின்றனர்.
இதனை கற்பிப்பதும் பாடசாலை ஆசான்கள்தான். இப்போது கேள்வி என்னவென்றால் பிள்ளைகள் பாடசாலையில் அடுத்த ஆண்டை துவங்கும்போது வகுப்பறையில் எதனை கற்பார்கள்? ஆசான்கள் எங்கிருந்து துவங்குவார்கள்? ஏற்கனவே தனியாரில் கற்ற பிள்ளையுடைய நிலை என்ன? தனியாருக்கு செல்லாத பிள்ளைகளின் நிலை என்ன? இதனை வைத்து ஆசான்கள் சாட்டுப் போக்கு சொல்ல முடியாதா? வகுப்பறையில் பிள்ளைகள் சோம்பேறி நிலைக்குச் செல்லாதா?
இவற்றுக்கு என்ன பதில்கள் இருக்கப் போகிறது? இதே நிலைதான் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிந்த கையோடு பெறுபேறு வருவதற்கு முன்பே பிள்ளைகளின் மனோநிலையை மாற்றி தனது துறையை பற்றி சிந்தித்து தீர்மானம் எடுப்பதற்கு முன்பே திட்டமிட்டு உயர்தர கல்வியை திணிக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலையில் கற்பிக்கும் அதே ஆசான்களே இதனையும் செய்வதால் பாடசாலை வெறும் வெற்று பேப்பர்களுக்கும், சுற்று நிருபங்களுக்கும் வேலை செய்யும் இடமா? என்ற கேள்வி எழுகின்றது.
இதற்குப் பிரதான காரணிகளாக பெற்றோரின் சுயநல போக்கும் ஆசிரியர்களின் மனோநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் குறிப்பிடலாம்.
இன்று தனது பிள்ளை தனியாருக்கு சென்று கற்றால்தான் சித்தி பெறும் என்ற மனோநிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விதைக்கப்பட்டுள்ளது.
இன்று பாடசாலைகளை கொண்டு செல்வதில் ஆசான்கள் மிகவும் தடையாக இருப்பதாக அதிபர்கள் முறையிடுவதை காணக்கூடியதாக உள்ளது.
ஆசான்களே!!! இவ்வுலகிலே மரணித்தும் உயிர்வாழும் உன்னத பணி இருக்குமென்றால் அது ஆசிரியப் பணி மட்டுமேதான்.
இந்தப் பணியின் உன்னதம் தற்போது கெட்டுப் போய் உள்ளது. காரணம் இது வருமானம் ஈட்டுவதற்கான முதலீடாக மாறிவிட்டது.
நீங்கள் செய்வதை கண்டு உங்களுக்கு பின்னால் உருவாகும் சந்ததியும் அறிவை சமூகத்துக்கு பிரயோசனம் இல்லாத ஒன்றாக ஆக்கி பொருளாதாரம் ஈட்டுவதை கண்ணூடாக காண்கிறோம். சமூகத்துக்கு பிரயோசனம் இல்லாத அறிவால் எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை.
எனவே பாடசாலையில் உங்களுக்குத் தந்த பொறுப்பை சரிவர நிறைவேற்றுங்கள். சமூகத்தில் நட்பிரஜை உள்ள மாணவர் சமூகம் ஒன்று உருவாகும்.
அல்லாவிடில் காலப்போக்கில் பாடசாலைகளின் தேவையே உணரப்படாமல் கல்வி தனியார் மயப்படுத்தப்படலாம்.
குறிப்பு:- பாடசாலையில் தன் பணியை திறன்பட செய்யும் நல்ல ஆசான்கள் என்னை மன்னிக்கவும்.