தலவத்துகொட சந்திக்கு அண்மித்த கிம்புலாவல பகுதியில் அமைந்துள்ள வீதி உணவு (STREET FOOD) கடைகள் உடனடியாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, உணவு மற்றும் மொபைல் கடைகள் அனைத்தும் பெப்ரவரி 24ம் திகதிக்குள் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், 33 கடைகளில் உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, 500 குடும்பத்தினர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
இந்த கடைகள் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மாலை முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும், மேலும் ஏராளமான மக்கள் உணவை ருசிக்க வருகை தருகின்றனர்.
இதனிடையே அமைச்சர் பந்துல குணவர்தன அவ்விடத்திலிருந்து பயணிக்கும் போது, வீதியில் அதிக வாகன நெரிசல் காணப்படுவதால், வாகன நெரிசலுக்கு காரணமான இந்த வீதி உணவு விடுதிகள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் வந்து கடை அமைந்துள்ள பகுதியில் அளவீடுகள் செய்து ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில், திடீர் தீர்மானத்தினால், வெளிநாட்டினரின் கவனத்தை ஈர்த்துள்ள இவ்விடம் மூடப்படுவதால், அவர்களின் பொருளாதாரம், மற்றும் இந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக, வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.