கிண்ணியா, குறிஞ்சாக்கேணிப் பாலத்தினை நிர்மாணிக்க சவூதி அபிவிருத்தி நிதியம் (SFD) நிதி உதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) பிரதிநிதிகளுடான கலந்துரையாடலின்போது குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட குறிஞ்சாக்கேணிப் பாலத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளை இணைக்கின்ற 100 மீற்றர் நீளமான பாவனைக்கு உதவாத இப்பாலத்தினை பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தினசரி பயன்படுத்தி வந்தனர்.
இதற்கு பதிலாக புதிய பாலமொன்றினை மூன்று கட்டங்களாக நிர்மாணிக்க நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த பாலம் சேதமடைந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலுள்ளது.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி குறித்த பாலம் அமைந்துள்ள பிரதேசத்தை படகு வழியாக கடக்க முயன்ற பாடசாலை மாணவர்கள் 09 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த பெரும் சோகம் இடைபெற்றிருந்தது.