செவிப்புலன் குறைபாடு காரணமாக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் திகதியை உலக செவிப்புலன் தினமாக அனுஷ்டித்து வருகின்றது.
காது கேட்பதன் முக்கியத்துவத்தையும், காதுகேளாத் தன்மையை எவ்வாறு தவிர்ப்பது என்றும் மக்களுக்கு உணர்த்துவதற்கான காலத்தின் தேவை தற்போது எழுந்துள்ளது.
சனத்தொகையில் 10 வீதமானோர் காது கேளாமைக்கு சிறு குறைபாடுகள் உட்பட ஆளாகியுள்ளனர்.
இன்று உலக செவிப்புலன் தினத்தை முன் வீட்டு மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கமைய இன்று உலக செவிப்புலன் தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் தொண்டை காது, மூக்கு (ENT) சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
செவிப்புலன் குறைபாடு காரணமாக தகவல் தொடர்பு சிக்கல்கள் ஏற்படுகின்றன. தொடர்ச்சியான காதுகேளாமை காரணமாக நினைவாற்றல் இழக்க வழியேற்படுகின்றது.
அத்துடன் இன்று மக்கள் செவி அரிப்புக்காக காதுகளில் பல்வேறு பொருட்களை விடுகின்றனர். அவை காதுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று அறுவைசிகிச்சை வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், அதிக சத்தத்திலிருந்து காதுகளை பாதுகாப்பது முக்கியம் என்று மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அக்குழந்தையின் செவிப்புலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், அத்துடன் தொழிற்சாலை போன்ற அதிக இரைச்சல் கூடிய இடங்களில் ஒருவர் கடமையில் இருந்தால் காதுகளை பாது காக்க வேண்டும்.
காதுக்குள் தண்ணீர் போகாதவாறு பாது காக்க வேண்டும். ஏதேனும் ஒரு பொருள் காதில் சிக்கிக் கொண்டால் உடனே உரிய மருத்துவர் ஒருவரை நாடி அதனை அகற்று வது மேனானது என்று இங்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளுக்கு பாதிப்பு
குழந்தைகள் இணையத்தில் கல்வி கற்கும் போது ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் அவர்களின் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் வைத்தியர் சந்திரா ஜயசூரிய இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குழந்தைகள் அடிக்கடி இயர்போன் பயன்படுத்துவதால், காதுக்குள் காது மெழுகு தள்ளப்படுவதாகவும், இதனால் காது அழுகல், பூஞ்சை, காது டிரம் ஆகிய பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று காதில் பாதிப்பு ஏற்படுவதால், காது கேளாமை ஏற்படும் எனவும், எனவே கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது செவித்திறன் குறைபாடு ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுமாறு கண் மற்றும் காது தொடர்பில் விசேட நிபுணர் வைத்தியர் சந்திரா ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.