நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு செல்வதற்காக சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா கம்பளை பிரதான வீதியில் நுவரெலியா லபுகெல தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று (5) காலை 9.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா, லபுகெல பிரதேசத்தில் உள்ள மரக்கறிப் பண்ணையில் இருந்து நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை எடுத்துச் சென்ற தொழிலாளர்கள் விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சாரதி லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரேக் போட்டபோது, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி சென்று பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை கொத்மலை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் லபுகெல பிரதேசவாசிகள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.