மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாராளுமன்றத்தில் உணவுக்கான செலவு 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் உணவுக்காக மாதாந்தம் சுமார் 90 இலட்சம் செலவிடப்பட்டதாகவும் அது தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடப்படும் பணத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை அதன் ஊழியர்களுக்கான உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் நாடாளுமன்றம் கூடும் நாட்களில் மட்டுமே உணவை எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் நாடாளுமன்ற ஊழியர்கள் மாதம் முழுவதும் (அரசு வேலை நாட்களில்) சலுகை விலையில் நாடாளுமன்றத்தில் இருந்து உணவை எடுத்துச் செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் விரயமாக்கப்படுவதும் அதிகளவில் காணப்படுவதாகவும் உணவுப் பொருட்களின் கழிவும்; முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, பாராளுமன்ற ஊழியர்களில் கிட்டத்தட்ட 2000 பேர் உள்ளனர். நாடாளுமன்றத்தின் உணவுச் செலவுகளை அமைச்சர்களின் உணவுச் செலவு என்று குறிப்பிடுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை பாரிய அதிகரிப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் உணவு வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.