பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த வருடம் மட்டும் 84 தடவைகளில் 2 கோடி பெறுமதியான கண்ணீர்ப்புகை பிரயோகம்

Date:

இலங்கையில் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் தொடர்பிலான அறிக்கையொன்று சமூக மற்றும் சமய நிலையத்தின் (CSR) குழுவினரால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.

கடந்த 10 வருட காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகைப் பிரயோகம் தொடர்பில் கடந்த 10 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இருபது மில்லியனின் கண்ணீர் என்ற பெயரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சமூக மற்றும் சமய நிலையத்தின் பணிப்பாளர் பாதிரியார் ரொஹான் சில்வா, ஊடகவியலாளர் ருகீ பெர்ணான்டோ, சட்டத்தரணி சுரேன் பெரேரா ஆகியோரின் கண்காணிப்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, சட்டத்தரணி மனூஷிகா குரே, பாத்திமா ரஸ்மா ஆகியோரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முடிவாக 15 விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  1. பொலிஸ் பிரிவுக்கு கண்ணீர்ப் புகை கொள்வனவு செய்யும் போது அதன் உள்ளடக்கம் தொடர்பிலான இரசாயனப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டு அனுப்பியவற்றை அப்படியே நம்பி வாங்கியிருக்கிறார்களே தவிர அவற்றின் உண்மைத் தன்மை பற்றி தேடப்படவில்லை. சில கண்ணீர்ப் புகைகளில் என்ன அடங்கியிருக்கிறது என்பது உற்பத்தியாளரால் குறிப்பிடப்படவில்லை.
  2. பொலிஸ் பிரிவுக்கு கண்ணீர்ப் புகை வாங்கும் பொழுது அதற்கான தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவுக்கு கண்ணீர்ப் புகை தொடர்பில் அறிவுடைய ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை.
  3. 2022 இல் பொலிசார் காலாவதியான கண்ணீர்ப் புகையை பிரயோகித்திருக்கிறார்கள். 2000 ஆம் ஆண்டில் உற்பத்தியான கண்ணீர்ப் புகையும் இதிலடங்கும்.
  4. 2012 இல் 20,000 கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் ரவைகளும் வாங்கப்பட்டுள்ளன. 2012 முதல் 2016 வரை 2306 கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் தோட்டாக்களும் பாவிக்கப்பட்டுள்ளன. ஏனையவை 2017 இல் காலாவதியானாலும் அவை அகற்றப்படவில்லை.
  5. 2012 இல் வாங்கிய 20,000 கண்ணீர்ப் புகைகளும் 2017 ல் காலாவதியாபவை. அதேபோல 2017 இல் வாங்கியவை 2021 லும் 2019 இல் வாங்கப்பட்ட 15,000 கண்ணீர்ப் புகைகளும் 2023 இலும் காலாவதியாபவை. இந்த வகையில் 40,000 கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் தோட்டாக்களும் காலாவதியானவையாக உள்ளன. 2012 முதல் 2022 ஜூலை 20 வரை 8265 கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் தோட்டாக்களும் பொலிசாரால் பாவிக்கப்பட்டுள்ளன. இவை 2012, 2017, 2019 வருடங்களில் வாங்கப்பட்டவை எனக் கருதினாலும் மேலும் 31,735 குண்டுகளும் தோட்டாக்களும் கையிருப்பில் எஞ்சியிருக்கின்றன.
  6. துப்பாக்கிகள் அருகாமையில் இருக்கையில் கண்ணீர்ப் புகை பிரயோகிக்கக் கூடாது என உற்பத்தியாளர்கள் அறிவுறுத்தியிருந்தாலும் 2022 இல் பிரயோகிக்கப்பட்ட கணிசமான கண்ணீர்ப் புகைகள் துப்பாக்கிகளுக்கு அருகில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  7. பயிற்றப்பட்ட அதிகாரிகளே கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளலாம் என்றும் போராட்டக்காரர்கள் மீது நேரடியாகப் பிரயோகிக்கப்படக் கூடாது என்றும் உற்பத்தியாளர்களே சொல்லியிருக்கும் நிலையிலும் 2022 இல் பயிற்றப்படாதவர்களும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் மீது நேரடியாகப் பிரயோகிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இதனால் பலர் காயமடைந்துமுள்ளனர்.
  8. போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிசார் வகைதொகையின்றி கண்ணீர்ப் புகையை பிரயோகித்திருக்கின்றனர்.
  9. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவிய 2022 மார்ச் 31 முதல் ஜூலை 20 வரை பொலிசாரால் 84 தடவைகளில் 6722 கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் தோட்டாக்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக அரசாங்கம் 26,706,578.17 ரூபாவை செலவிட்டுள்ளது
  10. கட்டடங்களால் சூழப்பட்டுள்ள சுத்தமான காற்றை இலகுவில் பெற முடியாத இடங்களிலும் பொலிசார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
  11. பல்வேறு பிரிவுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு காலாவதியாகிப் போயிருந்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் தோட்டாக்களும் பாவனைக்காக 2022 இல் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
  12. சிறுவர்கள், அங்கவீனர்கள், இருதய நோயாளிகள் இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் பொலிசார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
  13. கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கு முன்னரும் கூட பொலிசார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
  14. காலாவதியான கண்ணீர்ப் புகைகளை அப்புறப்படுத்துவதில் 2022 டிசம்பர் ஆகும் போதும் பொலிஸ்மா அதிபர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு காலாவதியான கண்ணீர்ப் புகை பிரயோகித்தமையை பொய்யாக்குவதற்கான போலியான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
  15. தகவலறியும் உரிமையின் கீழ் தகவல் வழங்கும் போது பொலிஸ் மாஅதிபரும் தொடர்புபட்ட தகவல் வழங்கும் அதிகாரிகளும் பொய்யானதும் ஏமாற்றுவதுமான தகவல்களை வழங்கியுள்ளனர்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழவின் தலைவர் தரிந்து ஜயவர்தன தெரிவித்தார். இந்த அறிக்கையினை https://rticsr.info/wp-content/uploads/2023/03/csr-book-01.pdf என்ற இணைப்பினூடாக பார்வையிட முடியும்.

அறிக்கையை வெளியீட்டு வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய சட்டத்தரணி சுரேன் பெரேரா, கண்ணீர்ப் புகை என்பது சர்வதேச சமவாயத்தில் இரசாயன ஆயுதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனதும் தனது சொந்த மக்கள் மீது இரசாயன ஆயுதங்களைப் பிரயோகிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட சந்தியா எக்னலிகொட, ஜயந்த போபகே, ருகீ பெர்ணாண்டோ ஆகியோரும் இலங்கையில் கண்ணீர்ப் புகைப் பாவனையை நிறுத்த வேண்டும் என்று கருத்து வெளியிட்டனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...