துருக்கியிலும் சிரியாவிலும் பெரும் அழிவை ஏற்படுத்திய பூகம்பம்; இடம்பெற்று
இரண்டு வாரங்கள் கழிந்துள்ள நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்
அவசரக் கூட்டம் ஒன்றை உடனடியாகக் கூட்டுமாறு பாகிஸ்தான் பிரதமர்
ஷெஹ்பாஸ் ஷரீப் கேட்டுள்ளார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிவாரண பொதி ஒன்று குறித்து ஆராய்வதற்காக இந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இதுவரை அதுபற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பூகம்பம் மற்றும் அதன் பின் ஏற்பட்ட அதிர்வுகள் என்பன காரணமாக இதுவரை
சுமார் 51000 பேர் மரணம் அடைந்துள்ளனர். இலட்சக் கணக்கானவர்கள்
வீடுகளை இழந்துள்ளனர்.
கணக்கிட முடியாத அளவுக்கு உள் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் பல மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு என்று சொல்லப்படுகின்ற Organisation of Islamic Cooperation (OIC) இன் பக்கம் இருந்து மட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற போது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பது அதன் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.
சில அறிக்கைகளின் படி OIC இன் செயலாளர் நாயகம் ஹிஸேன் பிராஹிம் தாஹா
துருக்கிக்கு விஜயம் செய்து தமது அனுதாபங்களையும் ஆதரவினையும்
தெரிவிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் அவரது அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எவ்வித உதவிகளையும் வழங்கியதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது உணவும், மருந்து வகைகளும் மற்றும் கடும் குளிரில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான அத்தியாவசியப் பொருள்களுமே தவிர வெரும் வார்த்தை ஜாலங்களைக் கொண்ட அனுதாபச் செய்திகள் மட்டும் அல்ல.
ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்த படியாக பெருமளவான அரசுகள் அங்கத்துவம்
வகிக்கும் முக்கிய அமைப்பான, ஜெத்தா நகரில் தலைமைகயத்தைக் கொண்டு
செயற்படும் OIC இல் 57 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன் பிரதான
நோக்கங்களில் ஒன்று உலகளாவிய ரீதியில் நான்கு கண்டங்களிலும் வாழும்
முஸ்லிம்கள் எங்காவது ஏதாவது நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தால் அவர்களுக்கு முடிந்தளவு தேவையான உதவிகளை வழங்குவதாகும்.
இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டமைக்கான காரணத்தை சற்று தேடி ஆராய்கின்ற
போது, முதலாவது உலகப் போரில் துருக்கி சாம்ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டது.
அதன் பிறகு அங்கு முஸ்தபா கமால் அதாதுர்க் தலைமையில் மதச்சார்பற்ற துருக்கி
குடியரசு நிறுவப்பட்டது.
சில தகவல்களின் படி முஸ்தபா கமால் அதாதுர்க் துருக்கி தேசத்தின் முஸ்லிம் என்ற போர்வையில் வாழ்ந்த ரோமானியாவைச் சேர்ந்த ஒரு யூதர் ஆவார்.
அவர் அங்கு இஸ்லாத்துக்கு முழுமையான தடைகளை விதித்தார். தொழுகை
மற்றும் நோன்பு என்பனவற்றுக்கு கூட அவர் தடைகளைக் கொண்டு வந்தார். உதுமானிய கிலாபத் ஆட்சி முறைக்கு முழுமையாக முடிவு கட்டினார்.
1924ல் துருக்கி பாராளுமன்றத்தால் கிலாபத் ஆட்சிமுறைக்கு முடிவு கட்டப்பட்டது.
இது ஐரோப்பிய காலணித்துவ ஆதிக்கத்துக்குள் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள்
சிக்கித் தவித்த நெருக்கடி மிக்க காலப் பகுதியாகும்.
இது இஸ்லாமிய அதிகாரத்துக்கு வேறு விதமான வடிவத்தைக் கண்டறியும் முயற்சிகளுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது.
முதலாவது உலகப் போரின் முடிவில் அன்றைய புதிய பூகோள அரசியல் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டதன் விளைவாக, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சிந்தனையாளர்களும், புத்திஜீவிகளும், தலைவர்களும் போருக்குப் பிந்திய முஸ்லிம் உலகில் நவீன கிலாபத் முறையொன்றை எவ்வாறு ஸ்தாபிப்பது என்ற கலந்துரையாடலிலும் விவாதத்திலும் ஈடுபட்டனர்.
கிலாபத் முறைக்கு முடிவு கட்டப்பட்டு ஒருசில தினங்களில், பதவி கவிழ்க்கப்பட்ட
கலீபா இரண்டாவது அப்துல்மஜித் சுவிட்ஸர்லாந்தில் ஒரு செய்தியாளர்
மாநாட்டை நடத்தினார்.
முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்கும் சர்வதேச மாநாடு ஒன்று கூட்டப்பட்டு, கிலாபத் முறை நீக்கப்பட்ட பின்னரான உலக முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராயப்பட வேண்டும் என அவர் அந்த மாநாட்டில் கேட்டுக் கொண்டார்.
சர்வதேச முஸ்லிம் தலைவர்களின் மாநாடு கூட்டப்பட வேண்டும் என்ற அவரின்
இந்தக் கோரிக்கை இஸ்லாமிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான சர்வதேச
முயற்சிகளுக்கான ஒரு மாதிரி அனுகுமுறையாக பல முஸ்லிம் தலைவர்களால்
நோக்கப்பட்டது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகம் எக்மெலித்தீன் இஹ்ஸநொக்லு இது பற்றிக் குறிப்பிடுகையில் இஸ்லாமிய ஒற்றுமை என்பது கிலாபத் முறையை மீண்டும் ஸ்தாபிப்தற்கான நடைமுறை சாத்தியமான ஒரு விடயமாக மட்டும் நோக்கப்படவில்லை.
மாறாக காலணித்துவம் மற்றும் துண்டாடல் போக்குகளின் விளைவாக முஸ்லிம் சமூகம் உலகளாவிய ரீதியில் முகம்கொடுக்கும் சவால்களை சந்திப்பதற்கான மிகவும் பொருத்தமான ஒரு பதிலடியாகவும் நோக்கப்பட்டது.
பல சமூக மட்டங்களில், சமய ரீதியில் மற்றும் முஸ்லிம் உலகின் அரசியல் தலைவர்கள் மத்தியில் பரவலான ஒரு பேசு பொருளாகவும் இது மாறியது.
நாடுகடந்த ஒரு இஸ்லாமிய அரசியல் அடித்தளத்தை ஸ்தாபிக்கும் முயற்சிகளும்
தொடர்ந்தன.
ஆகவே யுத்த காலப் பகுதியிலும் கூட தொடர்ந்து பல முஸ்லிம் மாநாடுகள் இடம்பெற்றன. இவற்றுள் பிரதான தொனிப்பொருளாக இருந்தது
இஸ்லாமிய ஒற்றுமை என்ற விடயமே.
இஸ்லாமிய கிலாபத் முறை நீக்கப்பட்டதன் விளைவாக உலக முஸ்லிம் காங்கிரஸ் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 1926ல் கைரோவில் ஒன்று கூடிய முக்கியமான முஸ்லிம் கல்விமான்கள் பலர் முன்வைத்தனர். இது பலருக்கு ஊக்கமூட்டும் ஒரு விடயமாகியது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை ஸ்தாபித்தல் முஸ்லிம்கள் மத்தியில் பிணைப்பை ஏற்படுத்தும் இந்த முயற்சிகள் அவ்வப்போதும்
பொருத்தமற்றதாகவும் இடம்பெற்ற போதிலும், இந்த செயற்பாடுகள் தான்
படிப்படியாக வலுவடைந்து 1969ல் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு உருவாகக்
காரணங்களாயிற்று. அதுவே பிற்காலத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு
அமைப்பாயிற்று. 1969 ஆகஸ்ட் 21ல், முஸ்லிம்களின் மூன்றாவது புனித வணக்க வழிபாட்டுத்தலமான அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு மிக மோசமான சேதங்கள்
விளைவிக்கப்பட்டன.
யூத சமய வெறியன் ஒருவன் அந்தக் கட்டிடத்துக்கு தீ வைத்து இந்த சேதத்தை விளைவித்தான். முஸ்லிம் உலகம் முழுவதும் இதற்கு பலத்த கண்டனத்தை வெளிப்படுத்தின.
அதே தினத்தில் இந்த விடயம் பற்றி ஆராய்வதற்காக முஸ்லிம் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் அவசர மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என ஜெரூஸலத்தின் பிரதான முப்தி கோரிக்கை விடுத்தார்.
முப்தியின் இந்த வேண்டுகோளை அடுத்து மொரோக்கோவின் மன்னர்
இரண்டாவது ஹஸன் தனது நாட்டின் தலைநகரான றபாத் நகரில் அவசர மாநாடு
ஒன்றில் பங்கேற்க வருமாறு முஸ்லிம் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு
விடுத்தார்.
இந்த விடயத்தில் சவூதி அரேபியா மற்றும் மொரோக்கோ என்பன
மேற்கொண்ட தீவிர ராஜதந்திர நடவடிக்கைகளின் விளைவாக 1969 செப்டம்பரில்
றபாத் நகரில் முதலாவது இஸ்லாமிய உச்சி மாநாடு இடம்பெற்றது.
இதில் பங்கேற்க சில நாடுகள் தயக்கம் காட்டின. இன்னும் சில நாடுகள் எதிர்ப்புத்
தெரிவித்தன. இவற்றை எல்லாம் மீறி 24 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த முதலாவது
உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த முதலாவது உச்சி மாநாட்டின் மூலம் தான் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் உருவாக்கத்திற்கான வழிகள் பிறந்தன.
1969 செப்டம்பர் 25ல் இடம்பெற்ற இந்த மாநாட்டில் முஸ்லிம் நாடுகள் பொருளாதார, விஞ்ஞான, கலாசார மற்றும் ஆன்மிக முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்களில் பரஸ்பரம் தமக்கிடையில் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு என்பனவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் நாடுகளுக்கு இயற்கை அழிவுகள் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும்
அழிவுகள் போன்ற இக்கட்டான காலப் பகுதிகளிலும் அவசர நிலைமைகளின்
போதும் சாத்தியமான எல்லா உதவிளையும் வழங்கப்பட வேணடும் என்பது OIC
இன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.
அதேபோல் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அந்த சமூகங்களின்
சமய, சமூக மற்றும் கலசார தரங்களை மேம்படுத்தவும் நிவாரணங்கள் மற்றும்
உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அம்சமும் இந்தப் பிரகடனத்தில் அடங்கி
உள்ளது. அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் OIC இன்
உருவாக்கத்துக்கு ஒரு முன்னோடி செயற்பாடாக அமைந்தது.
ஆனால் அதேவேளை பல முஸ்லிம்கள், முஸ்லிம் சமூகத்தின் பொதுவான அரசியல்,
பொருளாதார மற்றும் சமூக நலன்களை உள்ளடக்கிய ஒரு பரவலான செயற்பாடு
கொண்ட அமைப்பையே எதிர்ப்பார்த்தனர்.
இது 19ம் நூற்றாணடு முதல் முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வந்த எதிர்ப்பார்ப்பாகும். குறிப்பாக துருக்கி சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னும் முதலாம் உலகப் போரில் இஸ்லாமிய கிலாபத் ஆட்சி முறைக்கு முடிவு காணப்பட்டதன் பின்பும் முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வந்த இடைவெளி காரணமாக ஏற்பட்ட ஒரு பெரும் எதிர்ப்பார்ப்பாகும்.
2020ல் பாகிஸ்தானின் அன்றைய வெளிவிவகார அமைச்சர் எஸ.எம்.குரேஷி
காஷ்மீர் விவகாரம் தொடர்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்
நிலைப்பாட்டை விமர்சித்தார்.
இந்த விடயத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டின் கீழ் வரக் கூடிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவது பற்றி தான் ஆராயவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் கருத்துக்கு சவூதி அரேபியா உடனடியாக எதிர்ப்பை வெளியிட்டது.
இதன் காரணமாக 2018ல் தன்னிடமிருந்து பாகிஸ்தான் பெற்ற மூன்று பில்லியன் டொலர் கடனில் ஒரு பில்லியன் டொலரை உடனடியாகத் திருப்பித் தரவேண்டும் என சவூதி அரேபியா நிபந்தனை விதித்தது
மட்டுமன்றி பாகிஸ்தானுக்கான கடன்களை அத்தோடு நிறுத்திக் கொள்வதாகவும்
அறிவித்தது.
இன்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பரிதாபத்துக்குரிய நிலை இதுதான். இன்று இந்த அமைப்பு எல்லா செயற்பாடுகளிலும் தோல்வி கண்ட ஒரு அமைப்பாகவே உள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் அது இன்று தோல்வி கண்டுள்ளது.
சுமார் 100 வருடங்களாக நீடிக்கும் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளுக்கு கூட எதுவுமே செய்ய முடியாத நிலையில் அது உள்ளது.
காஷ்மீரில் இந்திய முஸ்லிம்கள் மீதும், சீனாவில் உய்குர் இன முஸ்லிம்கள் மீதும்,
மியன்மாரில் றோஹிங்யா முஸ்லிம்கள் மீதும் கட்டவிழத்து விடப்பட்டுள்ள
காட்டுமிராண்டித் தனங்களை கூட கண்டிக்க முடியாத செயலற்றுப் போன ஒரு
அமைப்பாகவே அது உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனுபவிக்கும் இந்த இன்னல்கள் பற்றி அவர்களுக்குத் தெரியுமா என்பது கூட சந்தேகமே.