ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது,
ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது.
தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்காததால், எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் கீழ், ஒரே பாலினத் திருமணங்கள் குற்றமற்றவை என அறிவிக்கப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் அடிப்படை உரிமையை மனுதாரர்கள் கோர முடியாது.
இந்துக்கள் திருமணத்தை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரஸ்பர கடமைகளை நிறைவேற்றுவதற்கான புனிதமான உடன்படிக்கையாக கருதுகின்றனர், அதே சமயம் முஸ்லிம்கள் திருமணத்தை உயிரியல் ஆணுக்கும் உயிரியல் பெண்ணுக்கும் இடையிலான ஒப்பந்தமாக கருதுகின்றனர்.
எனவே, மதம் மற்றும் சமூக நெறிமுறைகளில் நிறுவப்பட்ட நாட்டின் முழு சட்டமன்றக் கொள்கையையும் மாற்றுவதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றத்திடம் கோருவது அனுமதிக்கப்படாது என்று இந்திய அரசு வலியுறுத்தியது.