அடுத்த பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில், அடுத்த பொலிஸ்மா அதிபர், பொலிஸ்துறையில் முன்னுதாரணமான, எவ்வித களங்கமும் அற்றவராகவும், இலங்கை பொலிஸ்மாதுறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடியக ஒரு உத்தியோகத்தராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
பொலிஸ்மா அதிபர் நியமனம் மற்றும் முக்கிய அலுவலகங்களுக்கான மற்ற அனைத்து நியமனங்களும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நியமனச் செயற்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தப்படும் என்றும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஓய்வு பெறுவதையடுத்து எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவிக்கு,மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வியாழனன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக அறியமுடிகிறது. இதனையடுத்தே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது