வருமானத்தைக் காட்டாமல் வரி செலுத்தத் தவறிய சில தொழில்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுடன் நிதியமைச்சில் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது, பொது வருவாயில் அதிக கவனம் செலுத்தப்படும் போது, வரி விதிப்பு, வருவாய் வசூல் மற்றும் வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் கவனம் செலுத்த வேண்டும்.
வரி வருவாய் அறவீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் சியம்பலாபிட்டிய, உள்நாட்டு இறைவரி திணைக்கள மட்டத்தில் உரிய நபர்களைக் கையாள்வதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் முறைமையொன்றைத் தயாரிக்குமாறு பணிப்புரை வழங்கினார்.