இந்த ஆண்டுக்கான தேசிய வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் அனைத்து மதத்தினரின் ஆதரவுடன் கூட்டு நிகழ்ச்சியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் சமய விவகாரங்கள் மற்றும் சகவாழ்வுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்கால விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பங்களிப்பு, நோக்கம், எதிர்கால வேலைத்திட்டம் மற்றும் பிரச்சனைகளை அடையாளம் காண்பது தொடர்பாக நடைபெற்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில் பௌத்த அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் தொடர்பான எதிர்வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மதங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தற்போதுள்ள கலாச்சார வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் தேவையான சட்டத்தை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அமைச்சு வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவதற்கும் தேவையான செயற்பாடுகளுக்கு துறைசார் கண்காணிப்புக் குழு ஆதரவளிப்பதாகவும், தேவைப்பட்டால் அமைச்சரும் இக்குழுவில் ஈடுபடுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குழுவின் தலைவர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.