ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டெனால்டு டிரம்ப் உடன் இருந்த இரகசிய உறவு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்ததோடு, தேர்தல் பிரச்சார நேரத்தில் ஆபாச நடிகை வெளியிட்ட தகவல் டிரம்புக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு 1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று குறிப்பிடப்பட்டது.
அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் என்பதால் டிரம்ப் மீது விசாரணை நடந்து வந்த நிலையில் அவர் மீது சமீபத்தில் தேர்தல் பிரச்சார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானது. இந்த வழக்கில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்தநிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் டிரம்ப் சரணடைந்தார். இதையடுத்து டிரம்ப் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் தன் மீதான 34 கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு டொனால்டு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க அதிபர் ஜோ பைடன் மறுத்துவிட்டார்.
அமெரிக்க மக்கள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே அதிபர் கவனம் செலுத்தி வருகிறார் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.